பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
புதுச்சேரி தொகுதியில் பா.ஜ.க கட்சியில் தேர்தலில் நிற்க யாரும் தயாராக இல்லை. மேலும் சீட் வழங்குவதற்கு ரூ.50 கோடி லஞ்சம் கேட்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு புகார் கூறியுள்ள நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் பா.ஜ.க விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படியும், கண்டுப்புபடியும் அம்பலமான தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம், நாங்கள் ஊழல் செய்யாத கட்சி என கூறி வரும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வெட்கித்தலைகுனிய வேண்டும்.
கட்சிக்கு பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அரசு அமைப்புகளை வைத்து மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை பெற்றுள்ளது. இது மோடியின் இமாலய ஊழல், இதை உச்சநீதிமன்றம் வெளியில் கொண்டு வந்துள்ளது. இந்த பணத்தைக்கொண்டு தான் எதிர்கட்சிகளை கவிழ்க்கவும், நசுக்கவும் பயன்படுத்தப்பட்டது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் தேர்தல் பத்திர நன்கொடை விவகாரம் ஒரு விஞ்ஞான ஊழல் இது குறித்து முறையான விசாரணை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. அதை பாஜக சந்திக்க வேண்டும். காங்கிரஸ்-திமுக அமர்ந்து பேசி இந்தியா கூட்டணி சார்பில் புதுச்சேரிக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார்கள்.
அதே சமயம் புதுச்சேரி மக்களவை தொகுதியில் பா.ஜ.க கட்சியில் தேர்தலில் நிற்க யாரும் தயாராக இல்லை. ரூ.50 கோடி கொடுத்தால் தான் பா.ஜ.க சீட் வழங்கப்படும் என பேரம் பேசப்பட்டு வருகிறது. புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் யார் வேட்பாளர் என்று ஆட்சியில் இருப்பவர்களால் முடிவு செய்யமுடியவில்லை. பணத்தை நம்பியும், லஞ்சத்தை பெற்றும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு புதுச்சேரி பாஜகவினர் வந்து விட்டது பரிதாபமாக உள்ளது.
புதுச்சேரியில் ஆட்சியில் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு இரிடியம் கடத்தி வருகின்றனர். மத்திய அரசின் அனுமதியில்லாமல் வெளிநாட்டிற்கு செல்லும் அமைச்சர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யபப்ட வேண்டும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“