புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
புதுச்சேரி சோலைநகரை சேர்ந்த 9 வயது சிறுமி, தனது வீடு முன் கடந்த 2 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானாள். சிறுமியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த சாக்கடைக் கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கருணாஸ் (19), விவேகானந்தன் (57) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்று சாக்கடை கால்வாயில் வீசியது தெரியவந்தது.
கொலையான சிறுமியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் புதுவையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சிறுமி படுகொலைக்கு நீதிக்கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி மாநில அதிமுகவும், இந்தியா கூட்டணியும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை முதல் புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
கடலூரில் இருந்து சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளும் புதுச்சேரி வழியாக செல்ல வேண்டும். முழு அடைப்பு காரணமாக இந்த பேருந்து சேவைகள் அனைத்துமே விழுப்புரம் மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளன.
மேலும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலையில் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்டோ, ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் எல்லைப் பகுதி வரை செல்கிறது.
இந்த போராட்டம் இன்று மாலை 6 மணி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“