புதுச்சேரியில் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண் எடுக்க புதிய கட்டணம் நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி முழுவதும் 84 ஏரிகள், 454 குளங்கள் உள்ளன. இவை உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. விவசாய நிலங்களை வளப்படுத்த வண்டல் மண் தேவை. அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு அரசு சார்பில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஏரி, குளத்தை தூர்வாரியது. பொதுமக்களே தூர்வாரி அந்த மண்ணை விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தினர்.
இந்த நிலையில் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண் எடுக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உரிமைத் தொகையாக மாட்டு வண்டிக்கு ரூ.50, டிராக்டருக்கு ரூ.100, லாரிக்கு ரூ.150 செலுத்தி இணையம் வழியாக விண்ணப்பித்து அனுமதி வேண்டும். இந்த ரசீதை கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் தேவையான வண்டல் மண்ணை எடுத்துக் செல்லலாம். அந்த வகையில் வண்டல் மண் கட்டணம் தற்போது மாற்றியமைக்கப் பட்டுள்ளது. இதற்காக கனிமங்கள் ஒழுங்குமுறை மேம்பாட்டு விதிகளின் கீழ் திருத்தம் செய்யப்பட்டு, அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி சாதாரண மணல், களிமண், செம்மண் எடுக்க மாட்டு வண்டிக்கு ரூ.125, டிராக்டரில் 3 கியூபிக் மீட்டர் மண் எடுக்க ரூ.325, லாரியில் 8.5 கியூபிக் மீட்டர் மண் எடுக்க ரூ 1000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பு எடுக்க மாட்டு வண்டிக்கு ரூ.200, டிராக்டர், லாரிக்கு ரூ.1000, இதர தாது மணல் எடுக்க ரூ. 1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“