புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினால் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் துணிகளுக்கு பதிலாக அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும், ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் பட்டியல்/ பழங்குடியினர் இனமக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள 1,30,791 வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் ஓர் நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.500 மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 விதம் நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம் வரும் 4 ஆம் தேதி முதல் பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் ரூ.12.29 கோடி அரசாங்கம் செலவிடுகிறது.
மேலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான பயனாளர்கள் அனைவரது வங்கி சேமிப்பு கணக்கில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதத்திற்கான உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“