தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதா, தியாகி செல்லான் நாயக்கர் ஆகியோருக்கு புதுச்சேரி அரசு சார்பில் அரசு விழா எடுக்கப்படும்.எல்லா துறைகளிலும் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். என இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது. உறுப்பினர்கள் கேட்டதுபோல அதிக நாட்கள் சட்டமன்றம் நடைபெற்றுள்ளது. உறுப்பினர்கள் விரும்பியவாறு அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். மத்திய அரசின் உதவியோடு அதிக நிதி பெற்று, அதனை முழுமையாக செலவிட்டு புதுவை மாநிலத்தை முன்னேற்றுவோம் என உறுதியாக கூறுகிறேன்.
கடந்த ஆட்சியாளர்களால் நிர்வாக சீர்த்திருத்தத்தை கொண்டு வர வேண்டிய நிலையில் உள்ளோம். இதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தும். புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்பது அனைவரது எண்ணம். அதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு இந்த ஆண்டிலேயே பணி தொடங்கப்படும். காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்பதே அரசின் எண்ணம். ஒவ்வொரு துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சி காலத்தில் பல துறைகளில் பணியில் அமர்த்தப்பட்டு அரசில் சம்பளம் வாங்கியிருந்தால், அவர்கள் கடந்த ஆட்சி காலத்தில் நீக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு திரும்பவும் வேலை கொடுக்கப்படும். குறிப்பாக கேவிகே, அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, ஏ.என்.எம், பாட்கோ, பொதுப்பணித்துறை உள்ளிட்ட ஊழியர்களை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பணியின்போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்கப்படும். சிறந்த மருத்துவ வசதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ10 ஆயிரமாக உயர்த்தி தரப்படும். பத்திரிகையாளர்களுக்கு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதா, தியாகி செல்லான் நாயக்கர் ஆகியோருக்கு அரசு விழா எடுக்கப்படும். எல்லா துறைகளிலும் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். எல்.டி.சி யூ.டி.சி தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும்.
அரசு கொண்டு வரும் திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்
இ்வ்வாறு அவர் பேசினார்
இந்த அறிவிப்பை தொடர்ந்து, திமுக மாநில அமைப்பாளர் சிவா மற்றும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"