வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள 46 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் என்ற புயல் தீவிரமடைந்துள்ளது. இந்த புயலானது வரும் 5 ஆம் தேதி காலை ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கும், மசூலிப்பட்டிணத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 4, 5) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து திடீர் காற்றோடு மழை பெய்யும் என வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் 'மிக்ஜாம்' புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 46 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் 23 பேர் கொண்ட குழு காரைக்காலுக்கும், மீதமுள்ள 23 பேர் கொண்ட குழு புதுச்சேரி பகுதியிலும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“