புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றாக ஜிப்மர் விளங்கி வருகிறது. புற்றுநோய் ஆராய்ச்சி மையமும் அங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கடலூர், அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த புற்று நோயாளிகள் பெருமளவில் ஜிப்மரில்தான் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகக் கடந்த சில மாதங்களாக ஜிப்மர் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ரேடியேஷன் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற புகார்கள் வந்ததன் அடிப்படையில் அது தொடர்பாக டாக்டர் துரைராஜனிடம், ரவிக்குமார் எம்.பி கலந்தாலோசித்தார்.
“தற்போது உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் முழுமூச்சாகப் பணிபுரிகின்றனர். கதிரியக்க சிகிச்சை அளிப்பதற்காக சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் ஒரு புதிய கருவியை வாங்குவதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அதற்கான டெண்டர் கோரப்பட்டு இருக்கிறது. அந்தக் கருவி முழுமையானப் பயன்பாட்டுக்கு வர சுமார் ஒரு வருடம் வரை ஆகலாம். அப்போது மேலும் நூறு பேருக்குக் கூடுதலாக ரேடியேஷன் சிகிச்சை அளிக்க முடியும்” என்று டாக்டர் துரைராஜன் தெரிவித்தார்.
இப்போது உள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ரேடியேஷன் ஆங்காலஜி துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்கு மார்ச் மாதத்தில் அனுமதி பெற்றோம். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் ஜூன் மாதத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை இப்போதிருக்கும் ஷிப்ட் நேரத்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உயர்த்தினால் மேலும் 4 மணி நேரம் கிடைக்கும்.
அதில் இன்னும் பலருக்கு சிகிச்சை அளிக்கலாம். உடனடியாக அந்தத் துறைக்குப் பொறுப்பான டாக்டர் ஜெகதீஷிடம் பேசுகிறேன், என்று துரைராஜன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அதிகமாக இருப்பதையும், அதற்கான தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்த நாடாளுமன்றத்திலும், தமிழ்நாடு சுகாதரத் துறையிடமும் ரவிக்குமார் எம்.பி மேற்கொண்ட முயற்சிகள் பற்றி அவரிடம் தெரிவித்தார்.
அதற்காக டாக்டர் துரைராஜன் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அதன்பின்னர் இந்த விவரங்களை முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அவர்களிடம் தொலைபேசியில் ரவிக்குமார் எம்.பி தெரிவித்தார். அங்குள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார். ஜிப்மர் எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் அசோசியேஷனின் தலைவர் திரு பரமசிவம் உடனிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“