அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டதை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் திரும்பப்பெற்றுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் குடமுழுக்கு நிகழ்வை முன்னிட்டு புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி வரை புற (வெளி) நோயாளிகள் பார்வை இல்லை என்றும், மருத்துவமனை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை ரத்து செய்து மருத்துவமனையை மூடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், புதுச்சேரி சமூக நல ஆர்வலர் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரியில் நாளை வழக்கம் போல் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் தொடரும் என ஜிப்மர் மருத்துவமனை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது. இதனை தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிரான மனு திரும்ப பெறப்பட்டது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“