“நாங்கள் மதத்தை எதிர்க்கவில்லை. மதவாதத்தைத்தான் எதிர்க்கிறோம்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியது குறித்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மதத்தை வாதப்பொருளாக ஆக்கியது யார் என்பதை சிந்திக்க வேண்டும். எல்லா மதங்களும் இணையாக மதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது. தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தியாகராஜர் ஆராதனை விழா இன்று மாலை தொடங்கி வரும் 11-ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்று மாலை துவங்க இருக்கும் ஆராதனை விழாவை துவக்கி வைப்பதற்காக புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக திருவையாறு செல்லும் வழியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது மாநிலம் தமிழ்நாடு. எனது தேசம் பாரத தேசம். இதை துண்டாடக்கூடாது. தமிழ்நாடு தனிநாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. நாம் பாரத தேசத்தின் ஒரு அங்கம். தன்நாட்டுக்குள், ஒரு தன்நாடு தமிழ்நாடு. நாடு துண்டாடப்படுவது கொண்டாடப்படக்கூடாது. சிலர் பிரிவினை வாத கருத்துக்களை தெரிவிக்கும் போக்கு இங்கு காணப்படுகிறது.
கவர்னர் கருத்து சொல்லக்கூடாது என்பது இல்லை. அவர் சொன்ன கருத்தின் உட்பொருளை புரிந்து கொள்ள வேண்டும். எந்த பொருளில் அவர் பேசி உள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் இணைந்து இருக்க வேண்டும் என்பதை அவர் சொல்லி உள்ளார். அவர் மாநில முதல் குடிமகன் எனவே அவர் அவரது கருத்தை சொல்கிறார். அது அவரது கருத்து. அவர் கருத்து சொல்லக்கூடாது என்பது அல்ல.
வாசன் இசை ஆர்வலர். அவரது அழைப்பின் பேரில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவுக்கு செல்வதற்காக இங்கு உள்ளேன். இந்த ஆராதனை விழாவில் பல குடியரசு தலைவர்கள், கவர்னர்கள் கலந்து கொண்டுள்ளனர். வாசனும் நானும் இணைந்திருக்கிறோம். அவர் இசை ஆர்வலர், நான் ஆளுனர்.
அண்ணன் முதல்வர் (ஸ்டாலின்) அவர்கள் நாங்கள் மதத்தை எதிர்க்கவில்லை. மதவாதத்தை தான் எதிர்க்கிறோம் என கூறி உள்ளார். மதத்தை வாதப்பொருளாக ஆக்கியது யார் என்பதை சிந்திக்க வேண்டும். எல்லா மதங்களும் இணையாக மதிக்கப்பட வேண்டும்.
தமிழக பா.ஜ.க தலைவர் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. நான் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. எனவே, அண்ணாமலைக்கு நான் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது. அமைச்சர் உதயநிதிக்கு எப்படி ரிப்போர்டு கார்டு என்னால் கொடுக்க முடியாதோ, அதுபோல அண்ணாமலைக்கும் கொடுக்க முடியாது என்று சிரித்தபடி கூறினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது திருச்சி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பா.ஜ.க பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
ஜனவரி 11-ம் தேதி காலை நடைபெறும் தியாகராஜர் பஞ்சரத்ண கீர்த்தனை விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்ள விருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"