scorecardresearch

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்: நடைப் பயிற்சியின்போது மயங்கி விழுந்தது

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று காலை நடைப் பயிற்சி சென்ற போது தீடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது, இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்: நடைப் பயிற்சியின்போது மயங்கி விழுந்தது

புதுச்சேரி நகரப் பகுதியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி ஊர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வருகை தருவர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் யானை லட்சுமியிடம் ஆசி பெற்றுச் செல்வது வழக்கம். லட்சுமியிடம் ஆசி பெற்றால் நல்ல காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோவில் நிர்வாகம் யானையை பராமரித்து வந்தது. யானை லட்சுமியை தினமும் நடைப் பயிற்சி கொண்டு செல்வது வழக்கம்.

இந்தநிலையில் இன்று (நவம்பர் 30) காலை அதன் பாகன் யானையை நடைப் பயிற்சி கொண்டு சென்றார். கல்வே காலேஜ் அருகே நடைப் பயிற்சி சென்ற போது லட்சுமி யானை திடீரென மயங்கி விழுந்தது. பரிசோதனை செய்ததில் யானை உயிரிழந்ததாக கூறப்பட்டது. உடல் உபாதைகள் எதுவமின்றி யானைஆரோக்கியமாக இருந்து வந்தது. பக்தர்களின் செல்லபிள்ளையாக இருந்து வந்த லட்சுமி யானை உயிரிழந்தது கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

32 வயதான லட்சுமி யானை 1995-ம் ஆண்டு தனது 5 வயதில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 26 ஆண்டுகளாக கோவிலின் ஒரு அங்கமாக இருந்து வந்தது. இந்தநிலையில் யானை லட்சுமியின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Puducherry manakula vinayagar temple elephant lakshmi dies