புதுச்சேரி பால் உற்பத்தியாளர்களுக்கு புதுவை அரசு இதுவரை பாக்கித் தொகை ரூ. 10 கோடி தர வேண்டி உள்ளது. இதனால் கடுமையாக பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் பொறுக்க முடியாமல் போராட்டம் அறிவித்துள்ளனர் என திமுக எம்எல்ஏவும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று பூஜ்ஜியம் நேரத்தில் சட்டமன்றத்தில் பேசினார்.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் திமுக இரா. சிவா பூஜ்ய நேரத்தில் பேசியது, புதுச்சேரியில் பால் உற்பத்தியாளர்களுக்கு பல கோடி பாக்கி வைக்கப்பட்டுள்ளதால், அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லேக்கு பாலை அனுப்புவதை வரும் 23 இல் நிறுத்தி வைக்கும் போராட்டம் நடத்த புதுச்சேரி அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர்கள் பாண்லே எம்டி முரளியிடம் நோட்டீஸ் தந்துள்ளனர்.
பாண்லேக்கு சுமார் 100 சங்கங்களுக்கு மேல் கிராமத்திலிருந்து 20 குளிரூட்டும் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ஒன்றியத்துக்கு பால் கொண்டு செல்லப்படுவதும், இதற்கான பணம் 15 நாட்களுக்கு ஒரு முறை பால் உற்பத்தியாளர்களுக்கு தருவது வழக்கம்.
ஆனால் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்களுக்கு சரியாக ரொக்கம் தராததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு பாக்கித் தொகை ரூ. 10 கோடி உள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் பொறுக்க முடியாமல் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இதனால் புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு ஏற்படும். பெரியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் அதிகளவில் பாதிப்பு அடைவார்கள். இதுனை அரசு கவனமாக கையாள வேண்டும்.
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 36க்கு கொள்முதல் செய்யும் பணத்தை கொடுக்க முடியாதவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து ரூ.46க்கு கொள்முதல் செய்து, அதற்கான தொகையை மட்டும் உடனே கொடுத்து விடுகின்றனர். இதனால் தான் பால் உற்பத்தியாளர்கள் கோபம் கொள்கிறார்கள்.
இது நியாயமான கோரிக்கை தான். இதை நிறைவேற்ற அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநிலத்தில் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யும் போது, அதை நமது உற்பத்தியாளர்களிடம் கொடுத்து வாங்கினால் அவர்களது வாழ்வாதாரம் முன்னேறும் என்பதை கருத்தில் கொண்டு போராட்டம் அறிவித்துள்ள பால் உற்பத்தியாளர்களை மாண்புமிகு முதல்வர் அவர்கள் அழைத்து பேசி, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற உறுதி அளித்து, போராட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“