தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பெற்றோர்கள் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் சட்டமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் ரூ2 கோடி மதிப்பு வீட்டை அபகரித்த மகளிர் காங்கிரஸ் நிர்வாகி; மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறை
ஆறுமுகம் (என்.ஆர்.காங்கிரஸ்): புதுவை கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதா? புதிய கல்வி கொள்கையின் கீழ் எவ்வித பயிற்று மொழி நடைமுறையில் உள்ளது? தனியார் பள்ளிகளில் புதிய கல்வி கொள்கையின் கீழ் மாணவர் சேர்க்கை விதிகள் கடை பிடிக்கப்படுகிறதா? கட்டண தொகையை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
அமைச்சர் நமச்சிவாயம்: புதுவை கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுவை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு ஆகிய மொழிகள் பயிற்று மொழிகளாக உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கட்டண தொகையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும், உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு 2022 முதல் 2025 வரை 3 கல்வியாண்டுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வறிக்கை மேல் உத்தரவுக்காக கட்டண குழுவில் வைக்கப்படும். கூடுதல் கட்டணம் பெறுவது தொடர்பாக பெற்றோர்களின் தனிப்பட்ட புகாரின்பேரில் ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான குழுவால் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
ஆறுமுகம்: அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil