scorecardresearch

மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தி.மு.க வேடிக்கை பார்க்காது: புதுச்சேரி எம்.எல்.ஏ சிவா பேச்சு

கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் பெயரில் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தி.மு.க வேடிக்கை பார்க்காது என புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பரபரப்பு பேச்சு

மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தி.மு.க வேடிக்கை பார்க்காது: புதுச்சேரி எம்.எல்.ஏ சிவா பேச்சு

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் வரைபடத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை (மார்ச் 13) சுதேசி மில் அருகில் நடைபெற்றது.

தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் நிறுவனத் தலைவர் மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். இதில் திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா கலந்து கொண்டு பேசுகையில், சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பவளப்பாறைகள், அலையாத்தி காடுகள், மணல் குன்றுகள், பாரம்பரிய மீனவர்களின் வாழ்விடங்கள், மீனவர்கள் தொழில் செய்யும் இடங்கள் ஆகியவை சட்டப்படி பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். இவ்வாறான இடங்களில் வளர்ச்சி என்ற பெயரில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்று விதி உள்ளது. ஆனால் பக்கத்து மாநிலமான தமிழகத்தில் மீனவர்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் பாதிக்காவண்ணம் அத்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் சிறு மாநிலமான புதுச்சேரியில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணைக்கு விரோதமாக கடற்கரை சார்ந்து வாழும் மீனவ மக்களின் வாழ்வுரிமை மற்றும் கடற்கரை சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் வரைபடம் தயாரித்துள்ளது ஏற்புடையதல்ல. குறிப்பாக கடலோர மக்களின் குடியிருப்புகள், விளையாட்டு மைதானம், மீன் இறக்கும் தளம், மீன் காய வைக்கும் இடம், படகுகள் நிறுத்தும் இடம், வளைகள் பழுது பார்க்கும் இடம், பாதைகள், பள்ளிக்கூடம், கோயில்கள் என இவைகள் அனைத்தும் வரைபடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தும் மேற்கண்ட அம்சங்கள் இடம்பெறாமலும், ஏன் கடற்கரைப் பகுதி முழுவதும் மீனவ மக்களே வசிக்காமல் இருப்பதாக வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது மீனவ மக்களுக்கு இந்த அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

கடல் சார்ந்து வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரங்களையும், சுற்றுலா வளர்ச்சியையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த செயல்திட்டத்தை மீனவ மக்களோடு சேர்ந்து திமுக–வும் எதிர்க்கும். மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் பின்பற்றாமல் தயாரிக்கப்பட்டுள்ள கடற்கரை ஒழுங்காற்று மண்டல திட்ட வரைபடத்தினை மாற்றி அமைக்க வேண்டும்.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், சிபிஐ மாநில செயலாளர் சலீம், சிபிஎம் மாநில செயலாளர் இராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவபொழிலன், திராவிடர் கழக வீரமணி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், மனித உரிமைகள் பாதுகாப்பு பொதுச்செயலாளர் முருகானந்தம், தமிழர்களம் அழகர், மனிநேய மக்கள் கட்சி சகாபுதீன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், திமுக பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், ஆதிதிராவிட நலக்குழு மாநில துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் சரவணன் மற்றும் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Puducherry mla siva stage protest against gov sea management scheme