புதுச்சேரியில் மதுக்கடை மற்றும் சூதாட்ட நடன கிளப்பை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டதைதொடர்ந்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் மதுபான கடைகள் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முத்தியால்பேட்டை பகுதியில் குடியிருப்பு அருகே புதிதாக மதுபானம் மற்றும் சூதாட்ட நடன பார் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுபான நடன பாரை அகற்ற கோரியும், இதற்காக கொடுத்த அனுமதியை அரசு திரும்ப பெற கோரியும் கடந்த 11-ம் தேதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மதுபானக்கடை மற்றும் சூதாட்ட நடன கிளப் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், நேற்று இரவு திடீரென மதுக்கடையை திறக்க முயற்சி நடந்துள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் மக்கள் திடீரென மதுக்கடை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மதுக்கடையை மூட கோரி கோஷங்களை எழுப்பிய பொதுமக்கள் திடீரென ஆத்திரமடைந்து ஆவேசத்தில் மதுபான கூடத்தை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“