பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரியில் கழிவறையில் இருந்து விஷவாயு வெளியானதில் ஒரே பகுதியை சேர்ந்த மாணவி உட்பட 2 பெண்கள் உயிரழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது*
புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதி அருகே உள்ள புது நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கிருந்து விஷ வாயு வீடுகளில் கழிவறை வழியாக வெளியேறுவதாக புகார் இருந்து வந்தது. இதனிடையே இன்று காலை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறிய விஷ வாயுவால்,அதே பகுதியை சேர்ந்த தாய், மகளான மூதாட்டி செந்தாமரை (80), காமாட்சி (55) மற்றும் மாணவி செல்வராணி (15) ஆகியோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மூன்று பேர் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் அப்பகுதி முழுவதும் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு வெளியேறியதை கண்டறிந்தனர். இதனையடுத்து ஒலிப்பெருக்கி மூலம் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
இதனிடையே இந்த சம்பவம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு 5கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தகவல் புதுச்சேரி முழுவதும் காட்டுத்தீப்போல் பரவியது தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். மேலும் அங்கிருந்த பாதாள சாக்கடைகளில் இருந்த விஷ வாயுக்களை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/c1be108f6f5270812eed4a3190e2e13ada22a03d9794f6089612314a08b11f90.jpg)
இதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும் கழிவு நீர் சுத்திகரிக்கும் பணியில் தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த முதல்வர் ரங்கசாமி இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். புதுச்சேரியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிவாரணம் அறிவிப்பு
புதுச்சேரி, ரெட்டியார்பாளையம், புதுநகரில் இன்று (11.06.2024) ஏற்பட்ட விஷவாயு தாக்குதலினால் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் ந ரங்கசாமி உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து , முதலமைச்சர் அவர்கள் துறை அதிகாரிகளுடன் சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கூறியதாவது:-
"புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிவடைந்து வீடுகள்தோறும் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில், புதுச்சேரி, ரெட்டியார்பாளையம், புதுநகரில் பாதாள சாக்கடை வழியாக வீடுகளுக்கு விஷவாயு கசிந்ததன் மூலம் 2 முதியவர்களும் ஒரு சிறுமியும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இது மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் அளிப்பதாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உரிய ஆய்வினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது, அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விஷவாயு பரவாமல் தடுக்க ரெட்டியார்பாளையம் பகுதி மட்டுமன்றி, புதுச்சேரியின் அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு செய்யப்படும். விஷவாயு பரவாமல் தடுக்க அதிகாரிகள்
நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விஷவாயு தாக்கி இறந்த 2 முதியவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 இலட்சமும், இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சமும் நிவாரணமாக வழங்கப்படும்.” என்று கூறினார்
இதுகுறித்து தகவலறிந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் போதிய பராமரிப்பு இல்லை. புதுநகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தில் நச்சுக்கழிவு வாயு வெளியேறுவதற்கு தனியாக பைப் லைன் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்படி அமைக்கப்பட்ட பைப்–லைன்கள் பல இடங்களில் கசிவு ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அதை அதிகாரிகள் குழு தொடர்ந்து கண்காணித்து இருக்க வேண்டும். தவறிவிட்டதன் விளைவு இன்று மூன்று விலைமதிக்க முடியாத உயிர்களை நாம் இழந்துள்ளோம். புதுச்சேரி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் தோல்வி அடைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலில் பாதாள சாக்கடை திட்டத்தை மேம்படுத்தப்போவதாக அரசு தெரிவித்தது.
50 ஆண்டுகள் கடந்த நிலையில் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆகவே அரசு இதை முக்கிய பிரச்சானையாக கருதி, தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தை மேனிக்காக்க வேண்டும். அரசு துறையை முடிக்கிவிட வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக பம்பிக் செய்ய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு ஆறுதல் மட்டும் தெரிவிக்காமல் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த ஆய்வின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. செந்தில்குமார், எல். சம்பத், தொகுதி செயலாளர் கலியகார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“