புதுச்சேரி ரயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது புவனேஸ்வரில் இருந்து வந்த நபரிடம் இருந்து ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ரயில் மூலம் புதுச்சேரிக்கு கஞ்சா உட்பட போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்க காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார், மோப்ப நாயுடன் சென்று புதுச்சேரி ரயில் நிலையத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளையும் சோதனை செய்தனர்.
மேலும், புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரயில் பயணிகளிடம் சோதனை செய்தபோது, ஒரு நபர் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் திடீர் சோதனையால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“