பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுவையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் நுழைவு வாயில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுவை பொதுப்பணித் துறையில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் அறிவிப்புக்கு ஒரு சில நாட்கள் முன்பு வவுச்சர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் தேர்தல் கமிஷன் இந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதனால் தேர்தலுக்கு பின் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் புதுவை அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என முதல் அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார். ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ பணிகள் நடைபெறவில்லை. இதனால் சட்டசபையில் அறிவித்தபடி தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கடந்தத 30-ந் தேதி தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அன்றைய தினம் ஏற்கனவே தலைமை பொறியாளராக இருந்த சத்தியமூர்த்தி பணி ஓய்வு பெற்றார். தற்போது புதிய தலைமை பொறியாளராக பழனிப்பன் பதவியேற்றுள்ள நிலையில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் சில ஊழியர்கள், தலைமை பொறியாளர் அலுவலகத்தின் நுழைவு வாயில் ஆர்ச் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த போலிசார் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/