scorecardresearch

புதுவை முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ஊழியர்கள் கைது : அரசுக்கு கடும் எதிர்ப்பு

53 மாதங்களாக எங்கே சென்றீர்கள் என்றும், யார் தூண்டுதலின் பேரில் இங்கே வந்தீர்கள் என்றும் உங்கள் துறை அமைச்சரை போய் பாருங்கள்

puducherry
puducherry

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் 100கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் முதல்வர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது*

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், நிலுவையில் உள்ள 53 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 5 வருடங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன், ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி, கோரிமேட்டில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வந்தனர்.

முதல்வர் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஊழியர்கள் முதல்வர் வீட்டின் முன்பு காத்திருந்தனர். விளையாடிவிட்டு வந்த முதல்வர் ரங்கசாமியிடம், மீண்டும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்றும், 53 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அனைவரும் ஒரு சேர கூச்சலிட்டதால், கோபமடைந்த முதல்வர் ரங்கசாமி, 53 மாதங்களாக எங்கே சென்றீர்கள் என்றும், யார் தூண்டுதலின் பேரில் இங்கே வந்தீர்கள் என்றும் உங்கள் துறை அமைச்சரை போய் பாருங்கள் என கோபமாக பேசிவிட்டு வீட்டினுள் சென்று விட்டார்.

முதல்வரின் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், கோரிமேடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஊழியர்களை கைது செய்தனர். புதுச்சேரியில் முதல்வர் இல்லத்தை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பணி நியமனத்தை வலியுறுத்தி முதல்வர் வீட்டுக்கு சென்ற ரேஷன் கடை ஊழியர்களை கைது செய்த புதுவை அரசுக்கு ஏஐடியுசி தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது

இது குறித்து புதுச்சேரி மாநில ஏஐடியூசி பொதுச் செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி நியாய விலை கடை கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் 336 நியாய விலை இருந்து வருகிறது. இந்த கடைகளில் 580 மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 55 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இங்கு பணிபுரிக்கூடிய ஊழியர்கள் அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்கள். அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சு வார்த்தையில் நியாய விலை கடைகளை திறந்து சம்பளம் வழங்கப்படும் எனவும், நிலுவை சம்பளம் கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டு நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனை வலியுறுத்தி இன்றைய தினம், முதலமைச்சரை சந்தித்து முறையிடுவதற்கு ஊழியர்கள் அனைவரும் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று, முதலமைச்சரை சந்தித்து நியாய விலை கடைகளை திறக்க வேண்டும், நிலுவை சம்பளத்தை  வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனிடையே இங்கு வந்த காவல் துறையினர், ஊழியர்களை  கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இத்தகைய அரசின் நடவடிக்கை என்பது ஏற்புடையதல்ல.! இதனை வன்மையாக கண்டிக்கிறோம். முதலமைச்சர் ரங்கசாமி,உடனடியாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்கி, ரேஷன் கடையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கைது செய்த அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஏஐடியுசி புதுச்சேரி மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Puducherry ration employees protest against cm rangasamy