சுப்ரீம் கோர்ட் உத்தரவு புதுச்சேரிக்கு பொருந்தாது என்றால் அதற்கான உத்தரவை ஆளுநர் தமிழிசை வாங்கி வரட்டும் என புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இலை மறைவு காயாக இருந்த அதிகார பிரச்சனை கடந்த கால திமுக, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி தன்னுடைய மலிவு விளம்பரத்திற்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்று துணைநிலை ஆளுநருக்கு முழு அதிகாரத்தையும் புதுச்சேரி மாநிலத்தில் பெற்றுக்கொடுத்தார்.
புதுச்சேரியை போன்றே யூனியன் பிரதேசமான டெல்லியில் அந்த அரசானது கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தொடர் சட்ட போராட்டத்தை நடத்தினர். தற்போது உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை நேற்று முன்திம் வழங்கியது.
அதன் அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், அரசின் கொள்கை முடிவுகளிலும் அன்றாட நிகழ்வுகளிலும் துணைநிலை ஆளுநர் தலையிட கூடாது என்றும், அரசு துறைகளில் உயர் பதவிகளுக்கான ஐஏஎஸ் அதிகாரிகள், செயலர் உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளவர்களை நியமனம் செய்வதிலும், பணி மாற்றம் செய்வதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பிற்கு பிறகு நமது புதுச்சேரி அரசின் முதலமைச்சர் ரங்கசாமி இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று என்றும், மாநில அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.
அதே வேலையில் வழக்கம் போல் துணைநிலை ஆளுநர் அவர்கள் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக அரசுக்கு போதிய அதிகாரம் இல்லை என்றும், வழங்கப்பட்ட தீர்ப்பு டெல்லிக்கு மட்டும் பொருந்தும், புதுச்சேரிக்கு பொருந்தாது என்று கருத்தினை தெரிவித்திருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதே வேலையில் நாங்கள் பாசத்தோடு தான் ஒருவரை ஒருவர் செயல்படுவதாக கூறுவது ஏமாற்றுப்பேச்சு. துணைநிலை ஆளுநரின் அதிகாரம் புதுச்சேரியில் பறிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை இதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கொண்டு இந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், உயர் அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்டவைகளை ஆளுநரே செய்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏற்படுத்தும் அவமானம் ஆகும்.
முதலமைச்சர் ரங்கசாமி இந்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கு பின் அரசின் அதிகாரத்தில் துணைநிலை ஆளுநரின் குறுக்கீடு இருக்குமேயானால் இந்த தீர்ப்பின் சாதக பாதகங்களை பயன்படுத்தி முதலமைச்சர் ரங்கசாமி சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து சுப்ரீம் கோர்ட் சென்று டெல்லி தீர்ப்பை புதுச்சேரிக்கும் பொருந்தும் வகையில் ஒரு உத்தரவை பெற வேண்டும். அதற்கான கால சூழ்நிலை இதுதான்.
மாநில அந்தஸ்து என்பது தொடர்ந்து மத்திய அரசிடம் கையேந்த கூடிய ஒரு நிலையில் உள்ள சூழ்நிலையில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு முழு அதிகாரமும் உள்ளது என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை முதலமைச்சர் சாதகமாக பயன்படுத்தி உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கடந்த 2 வருடங்களாக ஆளுநர் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்திகொண்டார். நிரந்தர ஆளுநர் இல்லாத நிலையிலும் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தினார். மீதமுள்ள 3 வருட காலத்திற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட கூடாது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு புதுச்சேரிக்கு பொருந்தாது என்றால் அதற்கான உத்தரவை ஆளுநர் தமிழிசை வாங்கி வரட்டும்.
ஜிப்மர் நிர்வாகம் என்பது அரசு மருத்துவமனை. அது எப்போது தன்னாட்சி நிறுவனமாக மாற்றப்பட்டதோ அப்போது இருந்து தான் தன்னிச்சையாக முடிவு எடுத்து வருகிறது. எனவே மத்திய அரசு ஜிப்மருக்கு வழங்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
ஜிப்மர் மருத்துவமனையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது. அமைச்சர்கள், எம்.பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து குழு அமைக்க கூடாது. மருத்தவ வல்லுநர்களை வைத்து குழு அமைக்க வேண்டும்.
புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனை மெல்ல மெல்ல ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில கழக துணைச் செயலாளர் நாகமணி, புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மங்கலம் தொகுதி கழக செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.