ஜி-20 நாடுகளை சேர்ந்த இளைஞர்களின் ஒய்-20 (Y-20) மாநாடு ஆரோவில் மையத்தில் செவ்வாய் கிழமை (ஏப்.4) நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவி உடன் இணைந்து மாநாட்டினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் பேசியதாவது
நான்காவது மாதம் நான்காம் தேதி 4 மணிக்கு மகான் ஸ்ரீ அரவிந்தர் புதுச்சேரி வந்தடைந்தார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்துவது பாராட்டுக்குரியது.
இளைஞர்களை நோக்கியே அரவிந்தரின் குரல் இருந்தது. சுதந்திரக் கனல் நமது நாட்டில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போது ஒரு ஆன்மீகவாதியாக, நாட்டுப்பற்று எந்த விதத்திலும் குறையாமல், இந்த நாட்டிற்கு அவர் பணியாற்றினார்.
அரவிந்தர் இந்த நாட்டிற்கு விடுதலை வேண்டும் என்று மட்டும் நினைக்கவில்லை. ஆன்மீக விடுதலை அடைய வேண்டும் என்று நினைத்தார். அதுதான் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார்.
அரவிந்தருக்கும், பாரதியாருக்கும் இருந்த நெருங்கிய நட்பு நாம் நினைத்து நினைத்து மகிழ வேண்டியது. பாரதியார் அரவிந்தருக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதும் அரவிந்தர் பாரதிக்கு வடமொழி சொல்லிக் கொடுப்பதும் இருவரும் தேசிய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார்கள்.
நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று அரவிந்தர் கவலைப்பட்டார். அதே நேரத்தில் இளைஞர்கள் பிரம்மாண்டமான எதிர்காலத்தை ஆக்கப்பூர்வமாக அடைய வேண்டும் என்று நினைத்தார். மனிதாபிமானத்தோடு இருப்பதுதான் இந்த நாட்டுக்கு நல்லது என்பதை போதித்தவர்.
ஜி 20 என்பது ஒரே பூமி-ஒரே குடும்பம்-ஒரே எதிர்காலம். இது பாரத பிரதமர் கொடுத்த அழகான வாக்கியம். 5000 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னவர் தமிழகத்தை சேர்ந்தவர். இன்று உலகம் முழுவதும் இந்த குரல் ஒலிக்கிறது என்றால் அதற்கு பெருமைப்பட வேண்டியவர்கள் தமிழர்கள்.
நமது நாட்டிற்கு விடுதலை தேவைதான். ஆனால் இந்த விடுதலை நமது நாட்டின் கலாச்சாரம் என்ற அடித்தளத்தின்மீது நாட்டின் வளர்ச்சி என்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும்.
அரவிந்தர் அந்நிய கலாச்சாரத்தில் இருக்கும் நல்லவற்றை கூட எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இதைத்தான் நமது நாடு நமக்கு போதித்துக் கொண்டிருக்கிறது.
இளைஞர்கள் அனைவரும் அரவிந்தர் முதல் அனைத்து சுதந்திர போராட்டக்காரர்களை வீரர்களை பற்றியும் படிக்க வேண்டும்.
நாட்டைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த ஆரோவில் நிறுவனம்.
நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். சுதந்திரமாக வாழ்கிறோம். இது யாரால் கிடைத்தது என்றால் இளம்வயதில் தங்களைப் பற்றி கவலைப்படாமல் நாட்டை பற்றி கவலைப்பட்ட அரவிந்தர் போன்ற வீரர்களால் நமக்கு கிடைத்திருக்கிறது. அந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள் நாட்டுப் பற்றோடு கலாச்சாரத்தோடு இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையில் நம் நாட்டின் அடையாளம் குலைந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
ஜி 20 மாநாடாக இருந்தாலும் ஒய் 20 மாநாடு இருந்தாலும் இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் நிகழ்வாக இருக்கட்டும். நாம் எவ்வளவு உயர்ந்தாலும் நம் நாட்டின் கலாச்சாரத்தை தொலைத்து விடாமல் நமது நாட்டின் அடையாளங்களை வைத்துக்கொண்டு உயர்வோம், இவ்வாறு தமிழிசை பேசினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“