புதுச்சேரி மாநில அதிமுக கழக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரியை ஆளும் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசானது மத்திய அரசிடம் இருந்து மாநில உரிமைகளை பெறுவதிலும், மாநில சீர்கேடுகளை தடுத்து நிறுத்தவதிலும் முழுமையாக தவறியுள்ளது.
புதுச்சேரி மாநில மக்களுடைய நீண்ட நெடுநாள் கோரிக்கை மாநில அந்தாஸ்தாகும். துணைநிலை ஆளுநருக்கும், ஆளும் அரசுக்கும் அதிகார பகிர்வு சம்பந்தமான பிரச்சனை ஏற்படும் போது மட்டும் மாநில அந்தஸ்து பெறுவோம் என அரசு தம்பட்டம் அடிப்பதிலும், சட்டமன்றத்தில் அது சம்பந்தமான தீர்மானத்தை இயற்றுவதிலும் வெற்று வீரத்தை காட்டுவார்கள்.
மாநில அந்தஸ்து சம்பந்தமான சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசிடம் சட்டமன்ற உறுப்பினர்களோடும், அனைத்து கட்சி தலைவர்களோடும் கொண்டு செல்ல கூட யாரும் முன்வராமல் அப்பிரச்சனையை முழுமையாக கிடப்பில் போட்டு விடுவார்கள். புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கும் எண்ணம் மத்திய பாஜக அரசுக்கு இல்லை என பலமுறை நேரிடையாக சுட்டிக்காட்டிய பிறகும் நமது மாநிலத்தின் நிதி சம்பந்தமான நலன் என்பது மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது ஒன்றே தீர்வாகும்.
சட்டமன்றமே இல்லாத லடாக் போன்ற யூனியன் பிரதேசங்கள் மத்திய நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டு மாநிலங்களுக்கான 41 சதவீத மத்திய நிதி பகிர்வில் அந்த யூனியன் பிரதேசத்திற்கு நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. சட்டமன்றம் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க அரசு எடுத்த நடவடிக்கை இதுவரை ஒன்றும் இல்லை.
தற்போது நாடு முழுவதும் 2026 ஏப்ரல் மாதத்தில் இருந்து 5 ஆண்டுகாலத்திற்கான 16-வது நிதிக்குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிதிக்குழு தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிதி பகிர்வு சம்பந்தமான கருத்துக்களை கேட்டறிந்து வருகிறது. ஆனால் புதுச்சேரியை ஆளும் அரசானது இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தாமல் வெறும் பார்வையாளராக மட்டும் இருந்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வசூல் செய்யப்படும் மத்திய கலால் வரி, சுங்க வரி, வருமான வரி, தனியார் துறைமுகம் சுங்க வரி உள்ளிட்ட பலவிதங்களில் ஆண்டுக்கு பல்லாயிர கோடிக்கணக்கான ரூபாய் புதுச்சேரியில் இருந்து மத்திய அரசுக்கு வரியாக வசூல் செய்யப்படுவதில் ஒரு ரூபாய் கூட நமக்குரிய பங்கை மத்திய அரசு நமக்கு வழங்குவதில்லை.
அது மட்டுமல்லாமல் மத்திய அரசு நமக்கு வழங்கும் நிதியுதவியும் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. 100 சதவீத மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்ட நிதியும் மற்ற மாநிலங்கள் போன்று நமக்கு வெறும் 60 சதவீதம் மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள 40 சதவீதம் நம்முடைய சொந்த நிதியில் மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தும் அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
நம்முடைய மாநிலத்தின் சட்டப்பேரவை தலைவர் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு 30 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி மாநிலத்திற்கு 600 கோடி ரூபாய் செலவில் புதிய சட்டமன்றம் கட்ட மத்திய நிதி அமைச்சரை 21-வது முறையாக சந்தித்து மனு அளித்துள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றது.
875 கோடி ரூபாய் செலவில் புதிய பாராளுமன்றமே மத்திய அரசால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி அரசுக்கு புதிய சட்டமன்றம் கட்ட நமக்கு ரூ.600 கோடி தேவையா என்பதை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.
நம் மாநிலத்தின் சுற்றுலா பயணிகள் வருகை, போக்குவரத்து நெரிசல், வேலைவாய்ப்பின்மை, புதிய தொழிற்சாலைகள் உருவாக்குவதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிகபடியான நிதி நம் மாநிலத்திற்கு தேவை. கலால்துறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நியாயமான வரி உயர்வையும் அரசு உயர்த்துவது கிடையாது.
கலால்துறையில் புதிய கொள்கை முடிவையும் அரசு எடுக்க தயங்குகிறது. இந்நிலையில் நம்முடைய ஒரே தீர்வு என்பது மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது மட்டும்தான்.
நீண்ட நிர்வாக அனுபவம் கொண்ட நம் நாட்டு பிரதமருக்கு மிக நெருக்கமான இந்திய ஆட்சி பணி முடித்த நம் மாநில துணை நிலை ஆளுநர் புதுச்சேரி அரசுடன் இணைந்து மத்திய அரசை நேரடியாக வலியுறுத்தி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்ப்பதற்கான உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.
மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகளில் அதிகம் நாட்டம் கொண்டு செயல்படும் பாஜகவும், சட்டப்பேரவை தலைவர் துணைநிலை ஆளுநர் , முதலமைச்சரை டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி மாநிலத்தை உடனடியாக சேர்க்க உரிய நடவடிக்கையை மூவரும் மேற்கொள்ள வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.