பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுவையில் பெரிய மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கும் போலீஸாருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்*
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டை முழுமையாக இடித்துவிட்டு ரூபாய் 36 கோடி மதிப்பில் புதிய மார்க்கெட் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் வியாபாரிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு மாநகராட்சி சார்பில் அனைத்து கடைகளிலும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் இடிக்கப்படுவதாக ஒவ்வொரு கடை வாசலிலும் நோட்டீசை ஒட்டி சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் இன்று காலை அனைத்து கடைகளையும் அடைத்துவிட்டு காமராஜர் சிலை சந்திப்பு அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் 500கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டதால் புதுச்சேரி நகரப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 100கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்பு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை மறியலை கைவிடமாட்டோம் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசார் வலுக்கட்டாயமாக வியாபாரிகளை அப்புறப்படுத்த முயன்றனர். இரு தரப்புக்கு தள்ளுமுள்ளு, வாக்குவாதம் முற்றியது. மார்க்கெட் நிர்வாகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். மார்க்கெட் வியாபாரிகளின் திடீர் சாலை மறியலால் காமராஜர் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“