புதுவை அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் தாமதமாக வர சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29 ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணையில், வெள்ளிக்கிழமை காலை 8.45 மணிக்கு பணிக்கு வருவதற்கு பதிலாக 10.45 மணிக்கு பணிக்கு வரலாம் என்றும், இந்த நேர சலுகைக்காக உரிய அதிகாரியிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாதத்தில் 3 வார வெள்ளிக்கிழமையும், பெண்கள் மட்டுமே பணியாற்றும் அரசு துறைகளில் சுழற்சி முறையில் நேர சலுகை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அரசாணை இன்று முதல் அமலாகும் என தகவல்கள் வெளியானது. ஆனால் அனைத்து அரசு துறைகளிலும் இதற்கான சுற்றறிக்கை அந்தந்த துறை தலைவர்களிடம் இருந்து பெறப்படவில்லை. இதனால் இந்த நேர சலுகையை பெண்கள் கேட்கும்போது, அதற்கான அதிகாரிகள் சுற்றறிக்கை வரவில்லை என தெரிவித்துவிட்டனர்.
இதனால் பெரும்பாலான அரசு துறைகளில் இந்த நேர சலுகை இன்று அமலுக்கு வரவில்லை. ஒரு சில துறைகளில் மட்டும் இந்த சலுகையை அதிகாரிகள் பெண்களுக்கு வழங்கினர்.
இதுகுறித்து பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் கேட்டபோது, அரசாணையை இணையதளத்தில் வெளியிட்ட பிறகு அதை கடைபிடிக்கலாம். இதற்காக தனியாக சுற்றறிக்கை தேவையில்லை என தெரிவித்தனர். இதனால் அடுத்த வாரத்தில் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை நேர சலுகை வழங்கப்படும் என தெரிகிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“