புதுவையில் நடன மதுபார்களுக்கு கலால்துறை அனுமதி வழங்கி வருவதற்கு அரசியல்கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நடன பார்களால் கலாச்சார சீரழிவு ஏற்படும் என்றும், போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாவார்கள் என்றும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதேபோல பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதிகளில் மது பார் அமைக்க அந்தந்த பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சாலையில் பிறந்தநாள் விழா கொண்டாடிய போதை கும்பலால் மோட்டார்சைக்கிளில் வந்த என்ஜினியர் பலியானார். இது புதுவை மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ஜினியர் சாவுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரசார் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ரெஸ்டோ பார்கள் அனுமதியை ரத்து செய்யாவிட்டால் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதல அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.இந்த நிலையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கலால்துறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இன்று காலை கொக்குபார்க் ரவுண்டானா அருகே இளைஞர் காங்கிரசார் மாநில தலைவர் ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் ஒன்று கூடினர். அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்எல்ஏ, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், நிர்வாகிகள் மருதுபாண்டியன், தனுசு, கோபி, திருமுருகன், சிவா, சார்லஸ்,வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஆறுமுகம், ராஜசேகர், ராஜாகுமார், லட்சுமணன், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திரிகா, ரத்னா, சாந்தி, கவிப்ரியா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சத்யநாராயணன், சதீஷ்குமார், செல்வம், கோவலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதுவை என்ஆர்.காங்கிரஸ், பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்த கலால்துறை அலுவலகத்தை முற்றுகையிட அங்கிருந்து கிளம்பினர். அவர்களை போலீசார் பேரிகார்டு வைத்து தடுத்தனர். போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற பிற இளைஞர்களை போலீசார் கைது செய்ய சென்றபோது அவர்கள் அங்கிருந்து கலைந்து கிளம்பிச்சென்றனர்.
புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சி நீடித்தால் மேலும் 500 மதுபார் வரும் – நாராயணசாமி ஆவேசம்
புதுவையில் மது ஆறு ஓடுவதற்கு போலி சித்தர் ரங்கசாமிதான் காரணம். ஆன்மிக பூமியை தனது சுயநலத்திற்காக போதை பூமியாக மாற்றியுள்ளார் என்று ரங்கசாமி அரசை புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக விமர்சித்துப் பேசினார்.
புதுவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:
புதுவையில் மது ஆறு ஓடுவதற்கு போலி சித்தர் ரங்கசாமிதான் காரணம். ஆன்மிக பூமியை தனது சுயநலத்திற்காக போதை பூமியாக மாற்றியுள்ளார். சாலைகளில் பொதுமக்கள் நடக்கவே பயப்படும் சூழல் உருவாகியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் மது பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதல அமைச்சரை வந்து சந்திக்கின்றனர்.
அப்போது, இன்னும் 100 மதுபார் வரும் னெ ஆணவத்தோடு ரங்கசாமி கூறுகிறார். வருமானம் வேண்டும் என்பதற்காக மதுபார்களுக்கு அனுமதி தருவதாகவும் அவர் கூறுகிறார். மது வருவாயில் ஒரு ஆட்சி நடக்க வேண்டுமா? ஏற்கனவே 400 மதுபார்கள் புதுவையில் இருந்தது. தற்போது 900 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 40 பார்களுக்கு அனுமதி வழங்கும் கோப்பு முதல அமைச்சர் அலுவலகத்தில் உள்ளது.
ரூ.20 லட்சம் கொடுத்தால் ரெஸ்டோ பாருக்கு அனுமதி, ரூ.15 லட்சம் கொடுத்தால் விடுதிகளில் பார் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என பிரதமர் கூறினார். தற்போது ஒர்ஸ்ட் புதுவையாக மாறியுள்ளது. அதிகாலை வரை மதுபார்களில் குத்தாட்டம் போடுகின்றனர். அதற்கு பிறகும் சாலைகளில் வந்து நடனமாடுகின்றனர்.
சுற்றுலா பயணிகளை கவர பீர் பஸ் விடுகிறார். அதில் குடித்துக்கொண்டே புதுவைக்கு வந்து குடித்தபடியே திரும்பி செல்வார்களாம். காவல்துறையை பொறுத்தவரை மாமூல் கொடுத்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. முதல அமைச்சருக்கு அவரின் நாற்காலி இருந்தால் போதும். போதை கும்பலால் இறந்த என்ஜினியர் என்ன கனவு கண்டிருப்பார்?
அவர் ஒரே பிள்ளை. அவரது தாயார் இழப்புக்கு முதலமைச்சர் ரங்கசாமிதான் பொறுப்பேற்க வேண்டும். மதுபார் மட்டுமின்றி, 6 மதுபான தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்போகிறார்களாம். 2 ஆண்டு ஆட்சியில் 500 மதுபார் கூடியுள்ளது. இன்னும் இந்த ஆட்சி நீடித்தால் இன்னும் 500 பார் புதிதாக வரும். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? இளைய சமுதாயத்தை அழிக்க ரங்கசாமி முற்பட்டுள்ளார்.ரெஸ்டோ பார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை செல்லவும் தயங்க மாட்டோம்” இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி பேசிய காட்சி. அருகில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்எல்ஏ, ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் ஆகியோர் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“