புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்காத புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவரின் முடிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படுள்ளது.
புதுச்சேரி சட்டசபைக்கு மத்திய உள்துறை பரிந்துரையின் பேரில், புதுவை பாஜக தலைவர் உள்பட 3 பேர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேருக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் இதனை சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்க மறுத்துவிட்டார். அவர்கள் மூவரின் நியமனமும் முறையாக நடக்கவில்லை என்று அவர் காரணம் சொல்லியிருந்தார்.
தங்கள் மூவரையும் எம்.எல்.ஏ.வாக அங்கிகரிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் வைகுந்த் இன்று முறையிட்டார்.
வரும் 23ம் தேதி புதுச்சேரி சட்டப் பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களான சுவாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை
சட்டப் பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதியில்லை என புதுச்சேரி சட்டப் பேரவை தலைவர் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை எதிர்த்து தாக்கல் செய்யவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதைக்கேட்ட தலைமை நீதிபதி, மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.