புதுக்கோட்டை அ.தி.முக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் தி.மு.க-வில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினை சந்தித்து தன்னை இணைத்து கொண்டார். அ.தி.மு.க கட்சி போகின்ற போக்கே சரியில்லை என்றும், அ.தி.மு.க-வில் மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கார்த்திக் தொண்டைமான், "தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற நோக்கத்துடன், முதல்வர் மு.க ஸ்டாலினின் நல்லாட்சியில் தமிழகம் நன்றாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. நான் அதற்கு உறுதுணையாக இருந்து அனைத்து கட்சி பணிகளையும், மாவட்ட கழகத்தில் இணைந்து நிச்சயமாக செய்ய தயாராக இருக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன்" என்று கூறினார்.
/indian-express-tamil/media/post_attachments/eda17d85-aa4.jpg)
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கார்த்திக் தொண்டைமான், "அ.தி.மு.க மதவாத சக்தி கட்சிகளுக்கு உறுதுணையாக போகிறார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. அவர்களது செயல்பாடுகள் சரியில்லை. கட்சி போகின்ற போக்கே சரியில்லை. இதனால் தான் திமுகவில் இணைந்தேன்" என்று தெரிவித்தார்.
பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்த அன்வர் ராஜா, அ.தி.மு.க-வில் இருந்து விலகி அண்மையில் தி.மு.க-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.