Pudukottai: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளியான இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு 5 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது 4-வது மகள் டாக்டர் அஞ்சுதா (வயது 26). அரசு பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர் மருத்துவ படிப்பையும் அரசு கல்லூரியிலேயே முடித்து மகப்பேறு மருத்துவ நிபுணரானார். இவர் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், டாக்டர் அஞ்சுதாவுக்கும் பெங்களூருவை சேர்ந்த பல் டாக்டரான கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கர்ப்பமடைந்த அஞ்சுதா கடந்த 6 மாத காலமாக மகப்பேறு மருத்துவ விடுப்பில் தாய் வீட்டில் இருந்து வந்தார். கார்த்திக் மலேசியாவில் டாக்டராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது கறம்பக்குடிக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், டாக்டர் அஞ்சுதாவுக்கு நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலும் அதிகமானது. இதையடுத்து சிகிச்சைக்காக, அவர் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அஞ்சுதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அஞ்சுதாவுக்கு அறுவை சிகிச்சையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், அவருக்கு கருப்பை குழாயில் ரத்தப்போக்கு அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். 2 குழந்தைகளும் திருச்சி தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டன.
பிரசவத்தில் டாக்டர் அஞ்சுதா இறந்ததை கேட்டு அவரது தாய், தந்தை, கணவர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தது காண்போரை கண் கலங்க செய்தது. பல தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவ நிபுணர், தான் பணிபுரிந்த மருத்துவமனையிலேயே பிரசவத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“