scorecardresearch

புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தின் கடைசி ராணி ரமாதேவி மரணம்; திருச்சி- புதுகை பொதுமக்கள் அஞ்சலி

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்

pudukkottai queen
புதுக்கோட்டை ராணி ரமாதேவி

திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருச்சி முன்னாள் மேயர் சாருபாலாவின் மாமியாரும் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் தாயாருமான ராணி ரமாதேவி இன்று உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார்.

அவரது மறைவிற்கு திருச்சி மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: திருச்சி நெரிசலுக்கு தீர்வு: பிரம்மாண்ட புதிய பாலம்; எம்.எல்.ஏ அலுவலகம்- மகளிர் காவல் நிலையம் இடிக்க முடிவு

இது குறித்து விவரம் வருமாறு;

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பல சமஸ்தானங்கள் இருந்தது என்பதும், அந்த சமஸ்தானங்களை இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு சர்தார் வல்லபாய் படேல் இணைத்தார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் புதுக்கோட்டை சமஸ்தானமும் இந்தியாவில் இணைந்தது என்பதும், இருப்பினும் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் பரம்பரையில் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ஶ்ரீராஜகோபால தொண்டைமான் சகோதரர் ராதாகிருஷ்ணன் தொண்டைமானின் மனைவியும், ராஜகோபால தொண்டைமான், விஜயகுமார் தொண்டைமான் ஆகியோரின் தாயாருமான ராஜமாதா ராணி ரமாதேவி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 85. உடல் நலக்குறைவால் அவர் மரணமடைந்ததாக மன்னர் குடும்பம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ மாதா ராணி ரமாதேவியின் மகன் ராஜா ராஜகோபால தொண்டைமான் பிரபல துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். அகில இந்திய அளவில் இவர் பல பதக்கங்களை பெற்றுள்ளார். இவரது மனைவி ராணி சாருபாலா தொண்டைமான் திருச்சி மாநகராட்சியின் மேயராக பதவி வகித்தவர். இரண்டு முறை தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகள் திருச்சி மாநகராட்சி மேயராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றி மாநகர மக்களின் பாராட்டை பெற்றவர். திருச்சியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனையில் வசித்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ராஜா ராஜ கோபால தொண்டைமானின் அரண்மனை என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மக்கள் இன்னமும் மன்னர் குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pudukkottai kingdom last queen ramadevi died at trichy

Best of Express