/indian-express-tamil/media/media_files/2025/05/06/squw1prz2vUnxmuL2idM.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் நேற்று இரவு (மே 5, 2025), இரு சமூகத்தினரிடையே பெரும் மோதல் வெடித்துள்ள நிலையில், வன்முறை களமாக மாறியுள்ளது. இதனால் காவல்துறை அந்த ஊரில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் அறிக்கை அளிக்கும் வரை அந்த ஊருக்கு பேருந்து வசதி நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து, அமைச்சர் ரகுபதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வடகாடு கிராமத்தில், நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே, வடகாடு பகுதிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட, மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்ஸ் வலைதளத்தில் வடகாடு காவல் சரகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதியில் விடுகளுக்கு தீவைப்பு எனவும், 5 பேருக்கு அரிவாள் வெட்டு, பேருந்து கண்ணாடிகள் உடைப்பு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என செய்தி பரவி வருகிறது.
மேற்படி சம்பவமானது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி உட்கோட்டம். வடகாடு காவல் சரகத்திற்குட்பட்ட வடகாடு இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே 05.05.25-ம் தேதி சுமார் 21.30 மணியளவில் இரு சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்குமிடையே யார் முதலில் பெட்ரோல் போடுவது என வாய்தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் பதிலுக்கு பதில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி ஒரு தரப்பினர் அவர்களது குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற நிலையில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில், இன்னொரு தரப்பினரை பின்தொடர்ந்து சென்று மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டும், அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேற்படி சம்பவமானது குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எனவே எக்ஸ் வலைதளத்தில் இருசமூகத்தினர் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சினையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என்று பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மேலும் இவ்வாறு வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.