புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலான அளவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கும் அருகில் உள்ள ஆதிக்க சமூகத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இவர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது இவர்கள் கோயிலுக்குள் நுழையவும் பொது இடங்களை பயன்படுத்தப்படும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை சிலர் எதிர்த்து கேட்டிருக்கின்றனர். இதனையடுத்து இவர்களுக்கும் ஆதிக்க சமூகத்தினருக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் சிலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதனையடுத்து ஊரில் குடிநீருக்கு ஆதாரமாக இருக்கும் தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆவேசமடைந்த கிராம மக்கள் இது குறித்து காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கந்தர்வக்கோட்டை சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரை, வட்டார வளர்ச்சி துறை அலுவலர் ஆனந்தன் ஊராட்சித் தலைவர் பாத்திமா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு குற்றச்சாட்டை உறுதி செய்தனர்.

இதனையடுத்து இன்று காலை வேங்கைவயல் கிராமத்திற்கு ஆட்சியர் கவிதா ராமு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மக்கள் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கிராமத்திற்கு அடிபடை வசதிகள் ஏதும் செய்துகொடுக்கப்படவில்லை என்றும், அதேபோல ஆதிக்க சாதியினர் தங்களை கோயிலுக்குள் நுழையவிடவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கிராம மக்களை ஆட்சியர் கவிதா ராமு கையோடு ஆலயத்திற்குள் அழைத்து சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியருடன் எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் உடன் இருந்தனர்.
சிலர் ஆட்சியரின் இந்த முயற்சியை தடுக்க முற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஆட்சியர் இதனை பொருட்படுத்தாமல் மக்களை அழைத்து சென்றார். அப்போது கோயிலுக்கு உள்ளே ஒரு பெண் சாமிவந்ததைப் போல ஆடி இருக்கிறார். அதில் கோயிலுக்குள் ஆதி திராவிடர் சமூகத்தினர் நுழைந்ததை எதிர்த்து அவதூறாக பேசியிருக்கிறார்.

இதனையடுத்து வேங்கைவயல் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த சிங்கம்மாள் மீது வெள்ளனூர் காவல் நிலையத்தினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கெனவே கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்தது பெரும் பிரச்னையான நிலையில், சாமி ஆடி ஆதி திராவிடர் சமூகத்தினரை அவதூறாக ஒருவர் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து கோயில் நிர்வாகிகளிடம் ஆட்சியர் விசாரணை நடத்தினார். ஆனால் கோயில் நிர்வாகிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர். நாங்கள் அப்படி எதுவும் கூறவில்லை என்றும் அம்மாதிரியான உத்தரவு கோயிலிருந்து பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

இந்த சம்பவம் உங்கள் குறித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தெரிவிக்கையில், தமிழகத்தில் சாதி வன்கொடுமை இன்னும் மறையவில்லை என்பதற்கு வேங்கைவயல் கிராமம் ஒரு எழுத்துக்கட்டாக அமைந்துள்ளது. அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்றோர் மீண்டும் தமிழகத்தில் பிறக்க வேண்டும், இன்னும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் இந்த அநியாயத்தை சுமந்து கொண்டிருப்போம் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
க.சண்முகவடிவேல்