புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் கிராமத்தில், வேங்கைவயல் தெருவில் வசிக்கும் பட்டியல் இன மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் மனிதக் கழிவைக் கலந்ததாக புகார் எழுந்த நிலையில், அந்த கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் தெருவில் பட்டியல் இன தலித் மக்கள் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுடைய குடிநீர் தேவைக்காக 2016-17-ம் ஆண்டில் 10,000 லிட்டர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இதிலிருந்துதான் அவர்கள் குடிநீர் விநியோகம் பெற்று வந்தனர்.
இந்நிலையில், இறையூர் கிராமத்தில் பட்டியல் இன பகுதியில் வசிப்பவர்களின் சில குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் குடிநீரில் ஏதாவது பிரச்னை இருக்கலாம் என்று கூறியதை அடுத்து, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் மனிதக் கழிவைக் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வேங்கை வயலில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் குடிநீர் விநியோக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது குறித்து திங்கள்கிழமை புகார் எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சின்னதுரை அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, இறையூர் ஊராட்சி மன்றத் தலைவர் அளித்த புகாரின்பேரில், வெள்ளனூர் காவல் நிலைய போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் செவ்வாய்க்கிழமை இறையூர் கிராமத்துக்கு நேரில் சென்றனர். ஏற்கெனவே, அங்கு சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனை முகாமைப் பார்வையிட்டனர்.
குடிநீர்த் தொட்டியைப் பராமரிக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யப்படுகிறதா, மற்றவர்கள் ஏறும் வகையில் அந்த ஏணி திறக்கப்பட்டிருந்தது ஏன் என்றும் மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இறையூர் கிராமத்தினரிடம் குறைகளைக் கேட்டார். அப்போது, வெள்ளனூர் தேநீர்க் கடையில் தலித் மக்களுக்கு தனி டம்ளரில் தேநீர் கொடுக்கப்படுவதாகவும், அங்குள்ள அய்யனார் கோவிலுக்குள் உள்ளே விடுவதில்லை என்றும் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அதிகாரிகள் உடன் தேநீர்க் கடைக்குச் சென்ற அட்சியரிடம், அங்கிருந்தவர்கள் தேநீர் கடையில் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்று விளக்கமளித்தனர். அதேநேரத்தில், தேநீர் கடையின் உள்ளே கண்ணாடி டம்ளர், எவர்சில்வர் டம்ளர்கள் இருந்ததை எடுத்து வந்து பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆட்சியரிடம் காட்டினர்.
இதையடுத்து, இரட்டை டம்ப்ளர் முறையைக் கடைபிடித்த தேநீர் கடையின் உரிமையாளர் மூக்கையா (57) மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்ட்டார்.
இதைத் தொடர்ந்து, அய்யனார் கோவிலுக்குச் சென்ற ஆட்சியர் கவிதா ராமு, கோயிலை நிர்வகிப்பவர்களிடம் யாரையும் சாமி கும்பிட மறுக்கக் கூடாது என அறிவுறுத்தினார். அப்போது, கோவிலுக்கு வெளியே சிங்கம்மாள் (35) என்ற பெண் சாமி வந்ததைப் போல ஆடிக் கொண்டே, கோவிலுக்குள் இருந்தவர்களைத் தவறாகப் பேசினார். இதையடுத்து, அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இறையூர் கிராமத்தில் ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆய்வு செய்தபோது, பட்டியல் இனத்தவருக்கு தனிக் குவளை என இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கப்பட்ட தேநீர்க் கடையின் உரிமையாளர் மூக்கையா (57), கோவிலுக்கு வெளியே தவறாகப் பேசிய சிங்கம்மாள் (35) ஆகிய இருவர் மீதும் வெள்ளனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி நடத்திய இந்த அதிரடி ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா. கவிதப்பிரியா, இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ச. ராம்கணேஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதனிடையே, மேல்நிலை குடிநீர்தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக புகாருக்குள்ளான இறையூர் கிராமத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில செயல் தலைவர் இளமுருகு முத்து, மாநிலச் செயலர் மெய்யர் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டு தலித் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், இறையூர் சம்பவத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வரும் டிசம்பர் 30-ம் தேதி காவேரி நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும், அந்தப் போராட்டத்தில் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.