ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் பகுதியில் விற்பனை செய்வதற்காக சுமார் 22 கிலோ (மதிப்பு ரூ.2,20,000/-) கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.1,25,000/- அபராதம் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் அருகில் சந்தேகந்திற்கிடமான வகையில் கடந்த 14.09.2023-தேதி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் வைத்திருந்த வெள்ளை நிற பையை சந்தேகத்தின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் சோதனை செய்தபோது, அதில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் இருவரையும் பிடித்து தீவிர விசாரணை செய்தபோது, அவர்கள் தங்கி இருந்த தனியார் விடுதியில் உள்ள அறையில் மேலும் 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தின்பேரில், மொத்தம் 22கிலோ (மதிப்பு ரூ.2,20,000/-) கஞ்சாவையும் ஸ்ரீரங்கம் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் கஞ்சா வைத்திருந்த சீனிவாச ரெத்தினம் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து, திருச்சி மாநகர மதுவிலக்கு அமல்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, கடந்த 10.01.2024-ந்தேதி சீனிவாச ரெத்தினம் மற்றும் சீனிவாசன் ஆகியோர்கள் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாண்பமை அத்தியாவசிய பொருள்கள் (Essential commodities court) நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் 10 வருடங்கள் சிறை தண்டனையும், தலா ரூ.1,25,000/-அபராதமும் விதித்து, அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாத காலம் மெய்க்காவல் சிறைத்தண்டனையும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்தியும், இவ்வழக்கில் தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி பாராட்டினார்.
க.சண்முகவடிவேல்