பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/ மத்திய ஆயுதக் காவல் படை (சி.ஏ.பி.எஃப்)/ மத்திய காவல் அமைப்பு (சி.பி.ஓ) ஆகியவற்றின் 463 பணியாளர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான 'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பணியை அங்கீகரிப்பதற்கும், உயர் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதற்கும், பின்வரும் நான்கு துறைகளில் சம்பந்தப்பட்ட அலுவலர் / அதிகாரிகளின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது:
(i) சிறப்பு நடவடிக்கை.
(ii) புலனாய்வு.
(iii) நுண்ணறிவு.
(iv) தடய அறிவியல்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிகாட்டுதல் படி, தொடங்கப்பட்ட 'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' அனைத்து காவல்துறையினரின் மன உறுதியை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' 2024, கடந்த பிப்ரவரி 1 தேதியிட்ட உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டது. காவல் படைகள், பாதுகாப்பு அமைப்பு, புலனாய்வு பிரிவு / கிளை / மாநிலத்தின் சிறப்புப் பிரிவு / யூனியன் பிரதேசங்கள் / சிபிஓக்கள் / சிஏபிஎஃப் கள் / தேசிய பாதுகாப்பு காவலர் (என்எஸ்ஜி) / அசாம் ரைபிள்ஸ் உறுப்பினர்கள், தடய அறிவியல் (மத்திய/மாநில / யூனியன் பிரதேசங்கள்) ஆகிய துறைகளில் சிறப்பான செயல்பாடுகள், புலனாய்வில் சிறப்பான சேவை, அசாதாரணமான செயல்திறன் மற்றும் துணிச்சலான புலனாய்வு சேவை, தடய அறிவியல் துறையில் பணியாற்றும் அரசு விஞ்ஞானிகளின் பாராட்டத்தக்க பணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி, அதாவது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று இப்பதக்கம் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி தமிழ்நாட்டிலிருந்து புலனாய்வுப் பிரிவில் 7 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்திதாபாண்டே (எஸ்.பி), எம்.அம்பிகா (ஆய்வாளர்), கே. மீனா (எஸ்.பி), என். உதயகுமார் (ஆய்வாளர்), சி. கார்த்திகேயன் (ஏ.சி.பி), நல்லசிவம் (ஏ.சி.பி), எஸ். பாலகிருஷ்ணன் (ஆய்வாளர்) ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தடயஅறிவியல் பிரிவில் சுரேஷ் நந்தகோபால் (துணை இயக்குநர்) என 8 பேர் 'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' பெறுகின்றனர். விருது பெற்றவர்களின் முழுமையான பட்டியல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் https://www.mha.gov.in என்றஇணையதளத்தில் கிடைக்கும்.
யார் இந்த வந்திதா பாண்டே.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் வந்திதா பாண்டே. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் கேடராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2013 ஆம் ஆண்டில் சிவகாசி ஏ.எஸ்.பியாக தனது பணியை தொடங்கினார். 2014 ஆம் ஆண்டு சிவகங்கை ஏ.எஸ்.பியாகவும், 2015 ஆம் ஆண்டு கரூர் எஸ்.பியாகவும் அவர் நியமிக்கப்பட்டார். சிவகங்கையில் ஏ.எஸ்.பியாக பணியில் இருந்த போது போலீஸ் அதிகாரிகளாலும் அரசியல் பிரமுகர்களாலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்று, பல எதிர்ப்புகளை தாண்டி அதனை நீதிமன்றத்தில் சமர்பித்தார். இதனால் கோபமடைந்த அதிகாரிகள், அவரை வேறு மாவட்டத்திற்கு மாற்ற முயற்சித்தனர். அதன் விளைவாக 2015-ம் ஆண்டு கரூர் எஸ்.பியாக அவர் நியமிக்கப்பட்டார். அங்கும் அவர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் நான்கரை கோடி ரூபாயை பறிமுதல் செய்தார். பல விஐபிக்கள் போன் செய்தும் அதற்கெல்லாம் அடிபணியாமல் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டார். அதேபோல், 2016 சட்ட மன்ற தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பிடிக்கப்பட்டதற்கும் வந்ததிதா பாண்டேவே காரணம். கரூர் எஸ்.பியாக இருந்த வந்திதா பாண்டே மாற்றப்பட்டதற்கு கலைஞர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டிருந்தார். அதோடு, அன்றைய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வந்திதா பாண்டேவை கொலை செய்ய முயற்சி நடந்தது குறித்து மு.க.ஸ்டாலினும் பேசி எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இப்படி அவருக்கென தனி வரலாறே உள்ளது. அதன்பிறகு 2016 முதல் 2021 ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் டம்மி பதவிகளுக்கு தூக்கியடிக்கப்பட்ட வந்ததிதா பாண்டே அதிமுக ஆட்சி முடியும் வரை ஓரங்கட்டியே வைத்திருந்தனர். 2016 ஆம் ஆண்டில் ராஜபாளையம் போலீஸ் பட்டாளியன், 2017 முதல் 18 வரை ஆவடி பெட்டாலியன், 2019 முதல் 2021 வரை மதுவிலக்கு அமலாக்கத்துறை, கடைசியாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி என அவர் டம்மி பதவிகளிலேயே பந்தாடப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் மகப்பேறு விடுப்பில் சென்ற வந்திதா பாண்டே ஒரே பிரவசத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்த நிலையில் அவர் சில நாட்களுக்கு முன் மீண்டும் பணியில் சேந்த நிலையில், தற்போதைய திமுக அரசு அவரை புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக நியமித்தது என்பதும் வந்திதாபாண்டே திருச்சி எஸ்.பி வருண்குமாரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.