புதுக்கோட்டையில் வணிக யூகலிப்டஸ் மரம் வளர்ப்பால் நீரோட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், விவசாயம் பாதிக்கப்படுவதற்கு வேதனை தெரிவித்ததுடன் காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் 1974-ம் ஆண்டு வரை 75,000 ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பசுமையான காடுகளாக இருந்தன. இவை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளங்களுக்கு நீராதாரமாக விளங்கியதோடு விவசாயத்திற்கும் உறுதுணையாக இருந்தது.
ஆனால், 1974-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் வணிக நோக்கில் யூக்கலிப்டஸ், முந்திரி போன்ற மரங்கள் தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தால் நடப்பட்டன.
இந்த மரங்களை வளர்ப்பதற்காக வனப்பகுதியில் உள்ள காடுகளை அழித்து, யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதற்காக, நாற்புறங்களிலும் அகழிகளையும், பெரிய மண் தடுப்புகளையும் அமைத்து வருகின்றனர். இதனால் மழை நீரானது அதனுடைய ஓட்டத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால், கிராமங்களில் உள்ள கண்மாய் குளம் நிறையாமல், விவசாயம் தடைபடுகிறது.
இதனால், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதோடு, புதுக்கோட்டை மாவட்டத்தின் பாரம்பரிய நீர் மேலாண்மை அமைப்பு சிதையும் நிலையில் உள்ளது. தொடர்ந்து, வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டு வருகிறது. ஆகவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை நட இடைக்காலத் தடை விதிப்பதோடு, நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நீக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: “நகர் மயமாக்கலால் நாள்தோறும் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாய நாட்டில், விவசாயத்தை அழிக்க கூடாது. விவசாய சாகுபடி நிலங்கள் குறைந்து வருகிறது. கர்நாடகாவில் கன மழை பெய்தால் தான், காவிரி ஆற்றில் தண்ணீர் வருகிறது. நாளுக்கு நாள் விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நாம் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அதிகரிக்கும். தற்போது துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்கிறோம்” என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “காகித ஆலை வேண்டுமா உணவு வேண்டுமா” என கேள்வி எழுப்பினர்.
மேலும், “புதுக்கோட்டை மாவட்டத்தில் வன பரப்பில், யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் வளர்ப்பதால் , இதற்காக ஆங்காங்கே ஏற்படுத்தும் தடுப்புகளால், சமவெளி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு மழை நீர் வருவது தடுக்கப்படுகிறதா என 6 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.