நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை, எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் வழக்கம் போல மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரையும் கைது செய்தனர். அவர்களது 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதிகளான வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல்களில் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை இரண்டு மாத காலங்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கணக்கிட்டு மீன்பிடித் தடைக்காலமாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
இந்த மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜுன் 15லிருந்து தமிழக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கச் சென்று வருகின்றனர்.
2 மாதங்களாக தொழிலுக்குச் செல்லாமல், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் படகுகளை பழுது நீக்கி தொழிலுக்கு சென்று வருகின்றனர்.
சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்த நிலையில், தொடர்ச்சி சம்பவமாக இன்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“