அதிமுகவில் கட்சி விரோத நடவடிக்கைகள் தொடர்பாக இந்த வாரம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வி.புகழேந்தியும் ஒருவர். சென்னையில் திங்கள்கிழமை நடந்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புகழேந்தி முன்னதாக, 2016 ம் ஆண்டில் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் அதிமுகவுக்கு திரும்பினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் உடன் பேசிய புகழேந்தி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னர்செல்வம் (ஓபிஎஸ்) ஆகியோருடனான தனது உறவை விளக்கினார். சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கட்சி எவ்வாறு செயல்படுகிறது, இப்போது அவர் சசிகலாவுடன் கை கோர்ப்பாரா என்பது பற்றி கூறினார்.
அதிமுக தலைமை உங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்க என்ன காரணம்?
என்னை வெளியேற்றுவது என்பது ஒரு வாரத்திற்கு முன்பே கட்சியால் முடிவு செய்யப்பட்டது; திங்கள்கிழமை வெளிவந்த அறிவிப்பு சம்பிரதாயமான ஒன்று. நான் தவறு செய்ததாக அவர்கள் நினைத்தால் அவர்கள் என்னை அழைத்து விசாரணை நடத்தியிருக்கலாம். அம்மா (ஜெயலலிதா) உயிருடன் இருந்தபோது, விசாரணையை நடத்தாமல் ஒருவரை ஒருபோதும் நீக்க ற்றமாட்டார். இடைத்தேர்தல் வெற்றியை வாழ்த்துவதற்காக சேலத்தில் பழனிசாமியை சந்தித்த பின்னர் நான் மீண்டும் அதிமுகவுக்கு வந்தேன்.
கடந்த சுதந்திர தினம் அன்று கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் வீடுகளுக்கு மாறி மாறி சென்று மராத்தான் கூட்டங்களை நடத்தினார்கள். அப்போது நான் முதலில் ஓ.பி.எஸ் வீட்டுக்குச் சென்றேன். இது பழனிசாமியை கோபமடையச் செய்தது. எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா என்னை அழைத்து, அன்றைய முதலமைச்சரின் இல்லத்திற்கு வராமல் நீங்கள் ஏன் அவரது (ஓபிஎஸ்) வீட்டுக்கு சென்றீர்கள் என்று கேட்டார். அவர் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்பதால்தான் நான் போனேன் என்று சொன்னேன். நான் ஓபிஎஸ் பக்கம் இருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள் என்று சுப்பையா என்னிடம் கூறினார். நான் அதிமுக ஒரே கட்சி என்று நான் நினைத்ததிலிருந்து அதைப் புரிந்துகொள்ளவில்லை. இருப்பினும், அந்த நிகழ்விலிருந்து, நான் ஒரு ஓபிஎஸ் ஆதரவாளராக முத்திரை குத்தப்பட்டேன். பின்னர், நான் ஒருபோதும் சொல்லாத விஷயங்களில் குற்றம் சாட்டப்பட்டேன்.
நீங்கள் பழனிசாமியை குற்றம் சாட்டுகிறீர்கள், ஆனால், வெளியிடப்பட்ட கடிதத்தில் பன்னீர்செல்வத்தின் கையொப்பம் இருந்ததே?
மனோஜ் பாண்டியனைத் தவிர, எம்.எல்.ஏக்கள் யாரும் அந்த கூட்டத்தில் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கவில்லை. பன்னீர்செல்வத்திடம் இருந்து நன்மைகளை அனுபவித்த நத்தம் விஸ்வநாதன் உட்பட இந்த எம்.எல்.ஏக்கள் எல்லோரும் இப்போது அவரை பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள்.
பன்னீர்செல்வம் என்னை அழைத்து அது தவறு என்று மன்னிப்பு கேட்டார். அவருக்கு எந்த கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என்று கூறினார். கட்சி இப்போது பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களின் கைகளில் உள்ளது என்றார். கடிதத்தில் கையெழுத்திட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்று கூறினார்.
அப்போது, கட்சியில் பன்னீர்செல்வம் எதுவுமே சொல்லவில்லை என்று கூறுகிறீர்களா?
அங்கே இரட்டை தலைமை இல்லை. ஒரே ஒரு தலைவர் மட்டுமே இருக்கிறார். பன்னீர்செல்வம் துணை சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது… அல்லது அவருக்கு அதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியிருப்பார்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவர்கள் ஒரு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்தி, பொதுச் செயலாளராக பழனிசாமியைத் தேர்ந்தெடுப்பார்கள். ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு அவருக்கு செயற்குழு தலைவர் போல ஒரு பதவியை ஒதுக்குவார்கள்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவின் செயல்திறன் குறித்து உங்கள் பார்வை என்ன?
பழனிசாமி ஒரு அணுக முடியாத தலைவர். களத்தில் கட்சித் தொண்டர்கள் சொல்வதைக் காட்டிலும் தேர்தல் நிர்வாகக் குழு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். மாவட்ட அளவில் செயல்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களைத் தலைமைக்கு அனுப்ப முடியவில்லை. தேர்தலில் கட்சி 66 இடங்களை வென்றது. அதில் 55 இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தொகுதிகள் அதிமுகவின் கோட்டைகளாக உள்ளன; தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் அம்மாவுக்கும் (ஜெயலலிதா) புரட்சி தலைவருக்கும் (எம்.ஜி.ராமச்சந்திரன்) விழுந்த வாக்குகள். பழனிசாமிக்கு அல்ல.
உங்களை நீக்கியது குறித்து சசிகலா அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நீங்கள் அவருடன் கைகோர்க்க வாய்ப்பு உள்ளதா?
நானும் அவருடைய ஆடியோக்களைக் கேட்டேன். அவர் அரசியலுக்கு திரும்பியதும், அதிமுகவில் ஏராளமான மாற்றங்கள் இருக்கும். பழனிசாமி அண்ட் கோ சசிகலாவைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறி, அவரது செயல்களை நாடகமாடுகிறார் என்று கூறுகிறார்கள்… பிறகு ஏன், அவர்கள் கவலையடைந்து கட்சி உறுப்பினர்களை நீக்குகிறார்கள்?
சசிகலாவுடன் சேரவோ அல்லது அமமுகவில் இருக்கவோ எனக்கு திட்டம் இல்லை. அம்மாவின் கீழ் இருந்த காலகட்டத்தில் இருந்ததைப் போலவே அதிமுகவில் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கட்சி இப்போது பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரின் கைகளில் சிக்கியுள்ளது. அவர்கள்தான் முடிவெடுப்பவர்கள், அவர்களுக்கு எதிராக யாருக்கும் பேசத் துணிச்சல் இல்லை. இந்த மூன்று பேரிடம் இருந்து கட்சியைக் காப்பாற்றுவதற்கும், அது தப்பிப்பிழைத்து அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்கும் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். நான் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவேனா அல்லது வேறு திட்டங்கள் உள்ளதா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.