Tamil Nadu Weather Forecast, Cyclone Puravi Latest Updates: தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்ததை அடுத்து அதற்கு புரெவி எனப் பெயரிடப்பட்டது. இந்த புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே இன்று கரையைக் கடக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது பாம்பனுக்கு70 கி.மீ தொலைவில் புரெவி மையம் கொண்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரெவி புயல் காரணமாக தமிழக அரசு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமாநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறைக்கு ஈடாக ஜனவரியில் ஒரு சனிக்கிழமை பணி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Puravi Cyclone: புரவி புயல் தாக்கத்தினால் தென் தமிழகத்தில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்) சில இடங்களில் இன்று கனமானது முதல் மிக கனமானது வரை மழை பெய்யக் கூடும். மேலும், தெற்கு கேரளாவில் (திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா பகுதிகளில்) இதே அளவு மழை பெய்யக் கூடும். வட தமிழ்நாடு, புதுச்சேரி, மாஹே & காரைக்கால், வட கேரளாவில் கனமானது முதல் மிக கனமானது வரையில் ஆங்காங்கே மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
Web Title:Puravi cyclone live cyclone puravi tamil nadu weather forecast
புரெவி புயல்: மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மலாய் தீபகற்பம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தெற்கு அந்தமானில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் சாதகமான சூழல் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை தெண்டமண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், “மன்னார் வளைகுடா, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் நாளை காலை வரை இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்துவரும் 2 தினங்களுக்கு மழை தொடரும். சில பகுதிகளில் கனமழையாக இருக்கும். இந்த நிலை ராமநாதபுரம் பகுதியில் தொடர்ந்து இருப்பதால் தொடர்ந்து கடற்பகுதியிலிருந்து மேகக்கூட்டங்கள் நகர்ந்து வருவதால் மழை நீடிக்கும்.
அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி எதுவும் இல்லை. இப்போதைக்கு இதுதான் நிலை. இப்போதைக்கு அதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தாலும் மேலே வர வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் புரெவி புயலின் தாக்கத்தால் மிகவும் பழமையான தனுஷ்கோடி தேவாலயத்தின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. தேவாலயத்தின் எஞ்சிய பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை மற்றும் புரெவி புயல் மழை காரணமாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் ஆறு, குளம், கண்மாய் மற்றும் நீர் வழிதடங்களுக்கு செல்ல வேண்டாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன், “புரெவி புயல் கனமழையால் கடலூர்-அரியலூர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான குடிசைகள் மழை-வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். பல ஆயிரக் கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதம். அரசு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
என வலியுறுத்தியுள்ளார்.
புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புரெவி புயல் தெற்கு கேரளப் பகுதியை நோக்கி நகரும் என்பதால் உள் மாவட்டங்கள், வடமாவட்டங்களில் அதிகனமழை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மேகக்கூட்டம் திரளுவதால் 2 நாளைக்கு மிதமான மழைக்கும் சில நேரம் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் காரணமாகப் பெய்துவரும் கன மழையால் தஞ்சாவூர் அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த 50 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனம்ழை காரணமாக ,புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 3 மணி நேர நிலவரப்படி 104 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3,500 கன அடி வெளியேற்றப்படுவதால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை . கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து 35 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலையில் தாழ்வுமண்டலமாக மாறும் . 11 இடங்களில் அதீத கனமழை. 50 இடங்களில் கனமழை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல் . 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். வானிலை ஆய்வு மையம்
தொடர் கனமழையால் கடலூரில் முக்கிய சாலைகள் துண்டிப்பு . கடலூர் - சிதம்பரம் சாலையில் காரைக்காடு பகுதியில் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தம் . வடலூர் - சேத்தியாத்தோப்பு சாலையில் மருவாய் என்ற இடத்தில் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை . 4 நாள் பயணமாக வரும் மத்திய குழு, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்கிறது .சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்த திட்டம்
புதுச்சேரியில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை . புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் தொடர் மழை. தொடர் மழை காரணமாக அறிவிப்பு .
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது . கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு . சென்னை, புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் . இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி.
வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் காரணமாக, தமிழகத்தில் கொள்ளிடம் (36 செ.மீ), சிதம்பரம் (34 செ.மீ), பரங்கிப்பேட்டை (26 செ.மீ), மணல்மேடு (25 செ.மீ), குறிஞ்சிப்பாடி (25 செ.மீ), திருத்துறைப்பூண்டி (22 செ.மீ), சீர்காழி (21 செ.மீ) மற்றும் குடவாசல் (21 செ.மீ) ஆகிய 8 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல், நீண்டநேரமாக ராமநாதபுரம் அருகே ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக அங்கு கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல் தொடர்ந்து ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. ராமநாதபுரத்திற்குத் தென்மேற்கே 40 கி.மீ., பாம்பனுக்கு 160 கி.மீ. தொலைவில் தற்போது புரெவி உள்ளது.
புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்திற்குத் தூத்துக்குடி, சென்னை, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட18 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன், “புரெவி புயல் பாம்பனுக்கு தென் மேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது. புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கிறது. ராமநாதபுரத்துக்கும் - தூத்துக்குடிக்கும் இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது 60 கி.மீ வேகத்தில் காற்ரு வீசக்கூடும். என்று கூறினார்.
தென்காசியில் புயல் குறித்து ஆலோசனை நடத்திய அமைச்சர் உதயகுமார், புரெவி புயலானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மழை பொழிவு மட்டுமே இருக்கும். குற்றால அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதர்கு முதல்வருடன் ஆலோசிக்கப்படும்” என்று கூறினார்.
புரெவி புயல் காரணமாக தமிழக அரசு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமாநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறைக்கு ஈடாக ஜனவரியில் ஒரு சனிக்கிழமை பணி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘புரெவி’ என்ற புயல் அடுத்த 3 மணி நேரத்தில் பம்பன் பகுதி முழுவதும் நகரும். மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறாது. இது டிசம்பர் 3 ஆம் தேதி இரவு மற்றும் டிசம்பர் 4 அதிகாலை நேரங்களில் மேற்கு-தென்மேற்கு நோக்கி நகர்ந்து பம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே தெற்கு தமிழ்நாடு கடற்கரையை கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது 70-80 வேகத்தில் காற்று வீசும். சில நேரங்களில் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இதனால், அதன் தாக்கம் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும், படிப்படியாக தெற்கு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், தெற்கு கேரளாவின் அருகிலுள்ள மாவட்டங்களிலும் டிசம்பர் 4 அதிகாலை வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் இன்று மாலை 6 மணி முதல் வீச உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் வளைகுடாவில் இருந்து மேற்கு-வடமேற்கில் 70 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமாரிக்கு கிழக்கு-வடகிழக்கில் 230 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் நிலைகொண்டுள்ளது. புரெவி புயல் காரணமாக காற்றின் வேகம் சுமார் 70-80 வரை 90 கி.மீ வேகத்தில் செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழ்நாடு தெற்கு கேரளா கடற்கரைகளுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
புரெவி புயல் தாக்கம் காரணமாக இன்று (03.12.2020) சென்னை & மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - தூத்துக்குடி (வண்டி எண் 02693) & மைசூர் - தூத்துக்குடி (வண்டி எண் 06236) சிறப்பு ரயில்கள் மதுரை வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “நிவர் புயல் காரணமாக மின்சாரத் துறைக்கு ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. புரெவி புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகத்தைப் பொறுத்து மின்சாரம் நிறுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
புரெவி புயல் தாக்கத்தின் காரணமாக சாத்தான்குளம் பெரியதாழையில் 5 மீட்டர் அளவிற்கு உள்வாங்கியது கடல்... மக்கள் அச்சம்.
தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்த, தமிழகம், கேரளா, கர்நாடகா, அந்தமான் தீவுகள் உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய அவசர கட்டுப்பாட்டு மையம் கடிதம்.
திரிகோண மலையை கடந்ததால் புரெவி வலுவிழந்தது. தற்போது பாக்கு நீரிணை நோக்கி நகரும் புயலால் கடலோர மாவட்டங்களில் சில நாட்களுக்கு மழை இருக்கும் என்று கூறியுள்ளார். சென்னையில் மழை பெய்வதும் நிற்பதும் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு இலங்கை பகுதியில் இருந்து நகர்ந்த புரெவி தற்போது மேற்கு வடமேற்காக நகர்ந்து வருகிறது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. பாம்பனுக்கு கிழக்கு-தென்கிழக்காக 40 கி.மீ தொலைவிலும், குமரிக்கு கிழக்கு-வடகிழக்காக 260 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது புரெவி.
தொடர் கனமழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தனுஷ்கோடியில் கடல் அலையில் சிக்கி, புதிதாகப் போடப்பட்ட சாலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் வசித்து வந்த மீனவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு விசைப் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக, வடக்கு கடற்கரையிலிருந்து பாம்பன் பாலம் வழியாக தெற்கு குந்துகால் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. சில விசைப்படகுகள் நேற்றிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக நங்கூரத்தை அறுத்துக் கரை ஒதுங்கியுள்ளன. இதனால் மீனவர்களுக்குப் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 10 மணி நிலவரப்படி 200 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
"புரெவி புயல் நிலைமை குறித்து எடப்பாடி பழனிசாமி, பினராயி விஜயன் ஆகியோரிடம் பேசினேன். தமிழகம் மற்றும் கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மோடி அரசு செய்யும் என உறுதி அளித்தேன். இரு மாநிலங்களிலும் அதிக அளவில் ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்பு குழு களத்தில் உள்ளன" என அமித் ஷா கூறினார்.
கடந்த ஆறு மணி நேரத்தில் 12 கி.மீ வேகத்தில் இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கிலிருந்து புரெவி புயல் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, திருகோணமலைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ, பம்பனுக்கு (இந்தியா) கிழக்கு-தென்கிழக்கில் 180 கி.மீ மற்றும் கன்னியாகுமரிக்கு (இந்தியா) கிழக்கு-வடகிழக்கில் 380 கி.மீ. அருகே மையம்கொண்டது. இது டிசம்பர் 3-ம் தேதி காலை கிட்டத்தட்ட மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடாவில் வெளிப்படும் வாய்ப்பு அதிகம்.
டிசம்பர் 3 ஆம் தேதி இரவு மற்றும் டிசம்பர் 4 அதிகாலை, 70-80-லிருந்து 90 கிமீ வேகத்தில் வீசும். இதனால் தெற்கு தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் அதன் தாக்கம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கி படிப்படியாகக் கன்னியாகுமரி மாவட்டத்தை நோக்கி நகரும்.
புரெவி இன்று இரவு மற்றும் நாளை அதிகாலையில் பம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே தெற்கு தமிழ்நாடு கடற்கரையை 70-80 கி.மீ வேகத்தில் கடக்கும். 90 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. என்.டி.ஆர்.எஃப்-ன் இரண்டு அணிகள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
"நவம்பர் 29 முதல், புரெவி புயலுக்கு நடவடிக்கை எடுக்கத் தொடங்கினோம். இது நாளை திருவனந்தபுரம் மாவட்டத்தைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது" எனத் திருவனந்தபுரம் மாவட்ட ஆணையர் நவ்ஜோத் சிங் கோசா தெரிவித்துள்ளார்.
இன்று பகல் 1.30 மணிக்குத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புரெவி புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
புரெவி புயல் முன்னெச்சரிக்கைக் காரணமாகக் காரைக்காலில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்தார் ஆட்சியர் அர்ஜூன் சர்மா.
தென் தமிழகத்தில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்) சில இடங்களில் இன்றும், நாளையும் கனமானது முதல் மிக கனமானது வரையிலும், சில இடங்களில் மழை பெய்யக் கூடும்; நாளை தெற்கு கேரளாவில் (திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா பகுதிகளில்) இதே அளவு மழை பெய்யக் கூடும். வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, மாஹே & காரைக்கால், வடக்கு கேரளாவில் இன்றும், நாளையும் கனமானது முதல் மிக கனமானது வரையில் ஆங்காங்கே மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புரெவி புயல் தற்போது இலங்கையின் திரிகோண மலையில் இருந்து 70 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும் பாம்பனிலிருந்து 290 கிலோ மீட்டர் தூரத்திலும் கன்னியாகுமரிக்கு கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இலங்கையின் திருகோணமலை அருகே கிழக்கு பகுதியில் புரெவி புயல் கரையை கடக்க தொடங்கியது.