பிரபல நாட்டுப்புற இசை பாடகரும் திரை இசை பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரது மகள் பல்லவி தான் காணாமல் போகவில்லை என்னை யாரும் கடத்தவில்லை, நன்றாக இருக்கிறேன் என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
நாட்டுப்புற இசையிலும் திரையிசையிலும் தனது தனித்துவமான குரலால் இசை ரசிகர்களைக் கவர்ந்தவர்கள் பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி தம்பதியர். அனிதா குப்புசாமி அதிமுகவில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டுவந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் அதிமுகவிலிருந்து விலகியதாக அறிவித்தார்.
பாடகர் புஷ்பவனம் குப்புசாமி தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி டாக்டருக்கு படித்துள்ளார்.
இந்த நிலையில், புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கௌசிக் என்பவர் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பல்லவிக்கும் அவரது சகோதரிக்கும் சண்டை நடந்ததாகவும் அதனால், பல்லவி காரை எடுத்துக்கொண்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. காவல்துறை பல்லவியை கண்டுபிடித்து தரவேண்டும்” என புகாரில் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் காணாமல் போன புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவியை தேடி வந்தனர்.
இதனிடையே, காணாமல் போனதாக கூறப்பட்ட புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “நண்பர்களே நான் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போனதாகவோ தவறான செய்திகள் பகிரப்படுகின்றன. நான் நன்றாகவே இருக்கிறேன். போலியான தகவல்களை நம்பவேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.