சனாதனத்தில் எந்த வேறுபாடும் கிடையாது. தனிமனித ஒழுக்கத்தைப் பற்றி, நம்முடைய மூதாதையர்கள் கற்பித்தது தான் சனாதனம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், சனாதனத்திற்கு ஆதரவாக, பொதுமேடை விவாதத்திற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, நீங்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் உங்கள் அடையாளம் என்ன? நாங்கள் எங்களை இந்துக்கள் என்று சொல்கிறோம். நீங்கள் யார் என்பதை முதலில் வெளிப்படுத்துங்கள்.
குரான், பைபிள் எல்லாம் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சனாதனத்திற்கு அப்படி எந்த ஆதாரமும் இல்லை. சனாதனம் மனிதனை வேறுபடுத்தி பார்க்கக் கூடியது, சாதி, மதம், இனம், மொழி பார்க்கக் கூடியது என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதற்கான ஆதாரம் என்ன? சனாதனத்தை தோற்றுவிட்டது யார்? உங்களால் பொதுவெளியில் விளக்க முடியுமா?
பொதுமேடை விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நான் ரெடி, எந்த மதவாதிகளும் வேண்டாம். தி.மு.க தயாரா? சனாதனம் பிரிவினையை கற்பிக்கிறதா? திராவிடத்தைப் போல் பேதத்தை கற்பிக்கிறதா? பொது மேடை விவாதத்திற்கு நான் தயார். அந்த விவாதத்தில் தோற்றுவிட்டால், தி.மு.க ஆட்சியை விட்டு போகணும்.
சனாதனத்தில் எந்த வேறுபாடும் கிடையாது. எங்கு, எப்போது, யாரால் தோன்றியது எதுவும் தெரியாது. அது இயற்கையோடு, மனித வாழ்க்கையோடு இணைந்தது. தனிமனித ஒழுக்கத்தைப் பற்றி, நம்முடைய மூதாதையர்கள் கற்பித்தது தான் சனாதனம்.
இந்துக்களை ஒழிப்பதற்கு உதயநிதி எந்த ஆயுதத்தை கையில் எடுக்கப்போகிறார். ஈட்டியா? கம்பா? வேலா? உதயநிதி முதலில் சொல்ல வேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“