தமிழக அரசுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான விற்பனை மூலம் ரூ.44,000 கோடி வரி வருவாயாக கிடைத்துள்ளது.
அடுத்த ஆண்டில் டாஸ்மாக்கின் வரி வருமானத்தை ரூ.52 ஆயிரம் கோடியாக உயர்த்த அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பேரணி நடைபெற்றது.
கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்தார்.
இதைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, “திராவிட மாடல் என்று பேசுகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் மதுபான உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை ஆகியவை டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான விற்பனை மூலம் வரி வருவாயாக ரூ.44 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இதனை அடுத்த ஆண்டில் ரூ.52 ஆயிரம் கோடியாக உயர்த்த அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
டாஸ்மாக் துறையில் நடைபெறும் இந்த ஊழலுக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம்.
அவரின் ஆதரவில்லாமல் ஊழல் நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்து வரும் இந்த ஊழல் குறித்து ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என்று சுற்றம்சாட்டினார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, “ ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் ‘1 லட்சம் கோடி’ டாஸ்மாக் ஊழல். ஆதாரங்களுடன் புதிய தமிழகம் கட்சி வெளியீடு – விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அனுமதி கோரி ஆளுநர் அவர்களை சந்தித்து மனு” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil