/indian-express-tamil/media/media_files/2025/08/25/puthukottai-tn-minister-trb-rajaa-son-ignored-medal-from-bjp-leader-annamalai-tamil-news-2025-08-25-20-02-44.jpg)
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மகன் சூரிய ராஜா பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கையில் இருந்து பதக்கம் அணிய மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய 51-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இரண்டு நாளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இறுதி நாளான இன்று, துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக தொழில், முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மகன் சூரிய ராஜா பாலுவும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அவரை பதக்கம் வாங்க அழைத்தனர். அப்போது மேடைக்கு வந்த சூரிய ராஜாவுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்க அண்ணாமலை முயன்றார்.
ஆனால், சூரிய ராஜா பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுப்பு தெரிவித்தார். அண்ணாமலை மீண்டும் சூரிய ராஜாவுக்கு பதக்கத்தை அணிவிக்க முயன்றார். அப்போதும் சூரிய ராஜா பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்தார். இறுதி வரை பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த சூரிய ராஜா கடைசியாக பதக்கத்தை கையில் வாங்கினார். பின்னர் அவரின் கையைப் பிடித்து இழுத்த அண்ணாமலை குழு புகைப்படம் எடுக்க அழைத்தார். பிறகு கையை கூப்பிய வணக்கம் வைத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார் சூரிய ராஜா.
இந்நிலையில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மகன் சூரிய ராஜா மேடை நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டது நிகழ்வில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தோரின் முகம் சுளிக்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தி.மு.க-வினர், "தி.மு.க காரன் சாதாரணமா வரலடா! அண்ணாமலை கையால் பதக்கம் வாங்க மறுத்த எங்கள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மண்ணை அவருடைய மகன்... தந்தை 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி இல்ல பாய்கிறார்..." எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.