சென்னை ராயபுரத்தில் தமிழக அரசு சார்பில், புதுமைப்பெண் மற்றும் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து, உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும்‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதில் டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் சென்னை வந்தார்.
நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் பேசுகையில், தமிழகத்தில் இன்று கல்வித்துறையில் பல முன்னணி நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன. இவற்றில் புதுமைப் பெண் திட்டம் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்குமே முன்னோடித் திட்டமாக விளங்கப்போகிறது.
திறமை இருந்தும், வறுமை காரணமாக மாணவியர் படிப்பைக் கைவிடும் சூழல் உள்ளது. ஆனால் புதுமைப்பெண் திட்டம் இந்த இடைநிற்றலை தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம். இந்தியா முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும்.
66% மாணவர்கள், அரசுப்பள்ளியில் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் தரமான கல்வி, இலவசமான கல்வி வழங்க வேண்டும். டெல்லி, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம், டெல்லி வந்த தமிழக முதல்வர், மாதிரிப் பள்ளிகளை பார்வையிட வேண்டும் என்று கூறினார், அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவரை நேரில் அழைத்துச் சென்று பள்ளி மற்றும் மருத்துவமனைகளை காண்பித்தேன்.
அன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக முதல்வர், இதே போல மாதிரிப் பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த குறைந்தது 3-4 ஆண்டுகள் ஆகும். ஆனால் தமிழகத்தில் மிக குறைந்த காலக்கட்டத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்டாலினை நினைத்துப் பெருமையாக இருக்கிறது என்று கெஜ்ரிவால் பேசினார்.
‘புதுமைப்பெண் திட்டம்’ திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெற, இதுவரை சுமார் 4 லட்சம் மாணவிகள் தமிழகத்தில் விண்ணப்பித்துள்ளனா்.
இதில் முதல் கட்டமாக ஒரு லட்சம் மாணவிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 உதவித் தொகை செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“