புதுமைப்பெண் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்றது முதல், பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயண வசதி தரும் விடியல் பயணத் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப் பெண் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களைச் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
புதுமைப்பெண் திட்டம் ,முதன்முதலில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி வட சென்னை பாரதி மகளிர் கல்லூரில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
புதுமைப்பெண் திட்டம், வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மகளிர்க்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவியர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கிறது. புதுமைப் பெண்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அரசுக் கல்லூரிகளில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த புதுமைப்பெண் திட்டம், அரசு நிதிஉதவி பெறும் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதுமைப் பெண் திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முதலமைச்சரின் 'புதுமைப் பெண்' திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பை வரவேற்று முதலமைச்சரைப் பாராட்டுகிறேன். உயர் கல்வி படிக்கும் 75,028 மாணவிகள் பயன் பெறுவார்கள் என்ற தகவல் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்த முடிவு பல பயன்களைத் தரும் என்பதில் ஐயமில்லை” என்று பாராட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“