கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே10ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேங்கராக செயல்படும் என கொக்கரித்து வருகின்றனர். இதற்கிடையில், தமிழ்நாட்டின் ஓ.பி.எஸ் அணியினர் எடியூரப்பாவை சந்தித்து பேசியுள்ளனர்.
அதாவது, ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பாவை சந்தித்து பேசினார். அப்போது தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில் ஆதரவு அளிப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் முந்தியுள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் மோதல் போக்கு தொடர்கிறது. இந்த நிலையில் இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தேர்தல் மனுத் தாக்கல் ஏப்.13ஆம் தேதி தொடர்கிறது. கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை பெங்களூரு முதல் உப்பள்ளி வரை தமிழர்கள் பரந்து வாழ்கின்றனர்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் சொந்த தொகுதியான ஹாசனிலும் பரந்து விரிந்து காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“