கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சேர்ந்தவர் ஷோபனா(57).இவர் பொதுப்பணித்துறையின் மண்டல தொழில் நுட்ப கல்வி அலுவலகத்தில் செயற் பொறியாளராக உள்ளார். இவரது கட்டுப்பாட்டில் உள்ள வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, கடலுார், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகளின் கல்லூரிகளின் கட்டிடம் கட்ட ஒப்பந்தம் விடுதல், நிதியை ஒதுக்குதல் இவரது பணியாகும்.
இவர் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் ஷோபனாவின் வேலுார் அலுவலகம், ஒசூரில் உள்ள வீடு ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் 3,4 ஆம் தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
பொதுப்பணித்துறை கட்டிடத்தில் ஷோபனா தங்கியிருந்த அறையிலிருந்து, ரூ.15.85 லட்சம் பணம், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3 காசோலைகள், அலுவலகம் தொடர்பான 18 ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
அதே போல், ஓசூர் வீட்டில் ரூ.2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் பணம், 38 பவுன் தங்க நகைகள், 11 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 1.3 கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். மொத்தமாக ரொக்கப் பணமாக மட்டும் ரூ.2.27 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, ஷோபனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், பொதுப்பணித்துறை நிர்வாகம் அவர் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்குப் பணியிட மாற்றம் செய்தது.
இந்நிலையில், விசாரணைக்காக ஷோபனாவை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் ஓசூரில் இருந்து வேலூருக்கு நேற்று (நவ.30) காலை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேர விசாரணைக்கு பிறகு, அவரைக் கைது செய்தனர். தற்போது, ஷோபனா வேலுார் மகளிர் சிறையில் உள்ளார்.
அவர் லஞ்சம் வாங்கியதற்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் குறித்து விசாரிக்க லஞ்சஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil