மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை முன்னிலையில் பொதுப்பணித் துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஏராளமான போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். வேதா இல்லம் அரசால் இன்று கையகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக இரு அணிகளாக பிரிந்திருந்தபோது, அவற்றின் இணைப்புக்காக போயஸ் கார்டன் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என, கடந்த ஆகஸ்டு மாதம் 18-ஆம் தேதி அறிவித்தார். அதன்பின்பு, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன.
வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றப்படும் என அறிவித்த நிலையில், சில நாட்களிலேயே வட்டாட்சியர் தலைமையில் அங்கு அளவெடுக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், இன்று காலையில் வேதா இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செழியன், வட்டாட்சியர்,பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், வேதா இல்லத்தை இன்று அரசு கையகப்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, வேதா இல்லம் தங்களுக்குதான் சொந்தம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நீதிமன்றத்தை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கில், அரசுதான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதேபோல், தீபாவின் சகோதரர் தீபக்கும் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றக்கூடாது என வட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தார். அதனை வட்டாட்சியர் ஏற்கனவே நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா அறையில் ஆய்வு?
அண்மையில் சசிகலா குடும்பத்தினரின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற போது, போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்திலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போது ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்த, இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ஒப்புக்கொள்ளவில்லை. எனவே ஜெயலலிதாவின் அறைக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர்.
இன்று வருமான வரித்துறையினர் முன்னிலையில் தமிழக அரசின் வருவாய் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அந்த அறையின் சீலை உடைத்து ஆய்வு செய்ததாக செய்திகள் வெளியாகின. வருமான வரித்துறை சோதனை என்றால், போயஸ் கார்டனில் பதற்றமான சூழல் உருவாவதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் இப்படி கூட்டாக ஒரு ஆய்வை ஏற்பாடு செய்து கொண்டதாக கூறப்பட்டது.
ஆட்சியர் விளக்கம்
இதற்கிடையே ஆய்வுப் பணிகள் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன், ‘நினைவு இல்லப் பணிகளுக்காக போயஸ் கார்டன் இல்லத்தின் பரப்பளவை முழுமையாக ஆய்வு செய்துவிட்டோம். சுமூகமாக அந்தப் பணிகள் நடந்தன. வருமான வரித்துறையால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகளை திறக்கவில்லை’ என்றார் அவர்.