தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரசர்களில் இன்று முதல் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளதால் கட்டுமானப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:
தமிழ்நாடு கல்குவாரி கிரசர், எம்.சாண்ட் உரிமையாளர் சங்க மாநில நிர்வாகிகள் அவசர கூட்டம் மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மாநில தலைவர் சின்னசாமி தெரிவிக்கையில்; சமீபகாலமாக அரசு அதிகாரிகளின் அச்சுறுத்தல், போலி சமூக ஆர்வலர்கள் அச்சுறுத்தலால் கல்குவாரி தொழில் தொடர்ந்து நடத்த முடியாமல் கடுமையான சூழல் இருந்து வருகிறது. இதனால் இந்த கல்குவாரி தொழிலை நம்பி உள்ள குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. சட்டத்திற்கு உட்பட்டு முறையான அனுமதி பெற்றுக்கொண்டு கல்குவாரிகள் நடத்தி வருகிறோம். சட்டவிரோதமாக கல்குவாரிகள் இயங்கவில்லை.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.
இதன்படி தமிழகத்தில் உள்ள 2 ஆயிரம் கல்குவாரிகள், 5 ஆயிரம் கிரசர் மற்றும் டிப்பர் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பொருட்களை 15 வருடங்களுக்கு முன்பு எந்த விலையில் விற்பனை செய்து வந்தோமோ, அதே விலையில் தான் தற்போது விற்பனை செய்து வருகிறோம் என்றார்.
கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு உரிய அனுமதி பெற்று இயங்கி வந்த குவாரிகள் அனைத்தும் சுற்றுச்சூழல்துறையின் அனுமதி இல்லாமல் ஆனால், உரிய அனுமதியுடன் தான் இயங்கி வந்தது. தற்போது இதே கல்குவாரிகளை ரெனிவல் செய்யும்போது ஏற்கனவே உடைக்கப்பட்ட அழத்திற்கு எவ்வாறு கொடுக்க முடியும். ஆகவே, இந்த பென்ச் சிஸ்டத்தை ஸ்மால் குவாரிகளுக்கு நீக்க வேண்டும்.
திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கைத்தொழில் செய்து வரும் ஆட்டாங்கால், அம்மிக்கல், குழவிக்கல் போன்ற தொழில்களுக்கு கனிம விதியில் மாற்றம் செய்து அவர்கள் தொழில் செய்ய அனுமதிக்கவேண்டும், எங்களது கல்குவாரி விவசாயத்திற்கு அடுத்தப்படியாக நடைபெறும் மிகப்பெரிய அத்தியாவசிய தொழிலாகும். இங்கு கோடிக்கணக்கான தொழிலாளர்களும், குடும்பங்களும் இந்தத் தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில், தொடர்ந்து தொழிலை நடத்த தமிழக அரசு ஆதரவு தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"