குவாரி முறைகேடுகளைத் தடுக்க தமிழக முழுவதும் உள்ள குவாரிகளில் 6 மாதத்துக்கு ஒருமுறை ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அளவீடு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தந்தை ராமசாமி குவாரியில் முறைகேடு செய்ததாக விதித்த ரூ.15.55 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை வட்டாட்சியர் அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மேலும், குவாரி முறைகேடுகளைத் தடுக்க தமிழக முழுவதும் உள்ள குவாரிகளில் 6 மாதத்துக்கு ஒருமுறை ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அளவீடு செய்ய வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடைபெறாமல் இருந்திருந்தால், மனுதாரரின் குவாரியில் நடைபெற்ற முறைகேடு வெளிச்சத்திற்கு வந்திருக்காது எனவும் கருத்து தெரிவித்தார்.
மேலும், ஒரு குவாரியில் ரூ.15.55 கோடிக்கு முறைகேடு என்றால் தமிழகம் முழுவது 1700 கல் குவாரிகளில் எந்த அளவிற்கு முறைகேடுகள் நடந்திருக்கும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், முறையாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமல் விதிக்கப்பட்ட ரூ.15.55 கோடி அபராதத் தொகையை ரத்து செய்த நீதிபதி, மீண்டும் மாவட்ட ஆட்சியர், நில அளவைத் துறை மற்றும் கனிமவளத் துறை ட்ரோன் தொழில்நுட்ப உதவியுடன் சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட கற்கள் எப்படி எடுக்கப்பட்டன என்று ஆய்வு செய்து நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“