உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. அதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததைப் போல குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்த மனு மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மனுதாரரின் மனுவைப் பொறுத்தவரை, படத்தை பார்த்து, அது கற்பனை கதையா? என்பன உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்து தான் முடிவெடுக்க முடியும் எனவும், அதற்கு நான்கு வார கால அவகாசம் ஆகும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மோடி வாழ்க்கை வரலாற்று படத்தை பொறுத்தவரை, அவர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், இந்த வழக்கில் அப்படி அல்ல எனவும், 2017ம் ஆண்டு வெளியான நாவலின் அடிப்படையில் இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உண்மை சம்பவங்களை தழுவிய கற்பனை கதை எனவும் இணையதள தொடரின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள் தற்போது ஊடகங்களுக்கு சமூக பொறுப்பு குறைந்து விட்டதாகவும், டி.ஆர்.பி போட்டியில் உள்ளதாகவும் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொள்பவர் வீடியோ வெளியிடுவதாகவும், பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குற்றவாளி பெயர் புகைப்படம் வெளியிடுவதாகவும் தெரிவித்த நீதிபதிகள், வர்த்தக நோக்கில் ஊடகங்கள் செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.