வருடங்கள் கடந்தாலும் கேள்விகள் ஓயவில்லை – இறுதி ஊர்வலமும், கமல்ஹாசன் அரசியலும்!

கேள்வி: அப்துல் கலாம் இறுதி ஊர்வலத்தில் கூட கலந்து கொள்ளாத கமல்ஹாசன்…. கமல்: எதுங்க…? யாரோட இறுதி ஊர்வலத்துக்கு? கேள்வி: அப்துல்கலாம் இறுதி ஊர்வலத்தில்… கமல்: நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பது இல்லை. என்னுடைய நம்பிக்கை அப்படி. இந்த கேள்வி பதிலை பற்றி நாம் பெரிதாக விளக்கத் தேவையில்லை,…

By: March 9, 2020, 6:21:01 PM

கேள்வி: அப்துல் கலாம் இறுதி ஊர்வலத்தில் கூட கலந்து கொள்ளாத கமல்ஹாசன்….

கமல்: எதுங்க…? யாரோட இறுதி ஊர்வலத்துக்கு?

கேள்வி: அப்துல்கலாம் இறுதி ஊர்வலத்தில்…

கமல்: நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பது இல்லை. என்னுடைய நம்பிக்கை அப்படி.

இந்த கேள்வி பதிலை பற்றி நாம் பெரிதாக விளக்கத் தேவையில்லை, உங்களுக்கே புரிந்திருக்கும்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தொடங்கிய போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் இது.

கமல்ஹாசன் இவ்வாறு அளித்த பதில், அந்த நேரத்தில் இருந்து தற்போது வரை சர்ச்சையான ஒன்றாகவும், விவாதப் பொருளாகவும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ‘இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்ள மாட்டேன்’ என்பது அவரது தனிப்பட்ட நம்பிக்கை, உரிமை. அதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால், அதற்கு முன்னாள் நடந்த சில சம்பவங்களை மறந்து அவர் பேசியது ஏன்? என்பது தான் விவாதத்துக்கு காரணம். அப்துல் கலாம் மறைவுக்கு முன், அப்துல்கலாம் மறைவுக்கு பின் என்று கமல்ஹாசன் கலந்து கொண்ட மறைவு நிகழ்வுகள் மற்றும் இறுதி ஊர்வலங்களின் சிறிய தொகுப்பு இது.

கமலை முதன் முதலாக ‘உணர்ச்சிகள்’ படம் மூலம் ஹீரோவாக்கியவர் இயக்குனர் ஆர்.சி.சக்தி. இவர் கடந்த 2015ம் ஆண்டு மறைந்த போது, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மயானம் வரை கமல்ஹாசன் வந்திருந்தார். அதேபோல், பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மறைவிலும் கமல் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ‘ஆச்சி’ மனோரமா மறைவிற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகை சுஜாதாவின் மறைவிற்கும் நேரில் வந்து கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.

sivaji's furnal procession

நடிகர் சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தில் ரஜினி, கமல், இளையராஜா ஆகியோர் திறந்த வேனில் வந்தனர்.

இவ்வளவு ஏன்… நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த போது, அவரது உடல் கொண்டுச் செல்லப்பட்ட திறந்தவெளி வேனின் மேல் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அமர்ந்து சென்றதை நாடே பார்த்தது. இதையும் மீறி, கமல்ஹாசன் எப்படி நான் இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்வதில்லை என்று தெரிவித்தார் என்பது ஆண்டுகள் கடந்தும் நீடிக்கும் கேள்வியாக நீள்கிறது.

நடன இயக்குனர் ரகுராம் மறைவின் போது நேரில் வந்து கமல்ஹாசன் கண்ணீர் அஞ்சலி செலுத்திய போது எடுத்த வீடியோ!.

இவ்வளவு சான்றுகளுக்கு பிறகும், கமலின் கூற்றுப்படி, இறுதி ஊர்வலங்களில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என்று வைத்துக் கொண்டாலும், குறைந்தபட்சம் மறைந்த சக கலைஞர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியது போன்று, அப்துல் கலாமிற்கும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருக்கலாமே!.

அதையும் ஏன் அவர் தவிர்த்தார்?

அட.. இதெல்லாம் ஒரு கேள்வியாய்யா?? ‘அவருக்கு வேற வேலை இருந்திருக்கும்; அதனால வராம போயிருப்பார்’ என்று நாம் சொல்லி அடுத்த வேலையை பார்க்க போகலாம்.

அவரும் கூட , ‘எனக்கு அப்போது ஒரு முக்கிய வேலை இருந்தது… அல்லது, வெளிநாட்டில் இருந்தேன்’ போன்ற பதிலைக் கூட சொல்லி இருக்கலாம். ‘இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதில்லை’ என்று அவர் சொன்ன அந்த வார்த்தை தான் அவர் மீதான கேள்விகளை எழுப்ப காரணமாக அமைகிறது.

2019 ஏப்ரல் மாதம் இயக்குனர் மகேந்திரன் காலமான போது, அவரது வீட்டிற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி திரும்பினார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் கடந்த ஆண்டு மறைந்த போது,  அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்காக பெசண்ட் நகர் மின் மயானத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது கமல் ஹாசன், நடிகை பூஜா குமாரும் மயானத்திற்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மிகவும் அமைதியாக கண் கலங்கியவாரு தன்னுடைய நண்பரான கிரேசி மோகனின் உடலை பார்த்து இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியவர் கமல்ஹாசன்.

இப்போது மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவு நிகழ்வு வரை வரை நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தி கடமையாற்றி இருக்கிறார்.

நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பது இல்லை என்பதற்கும்; துக்க வீட்டிற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி மட்டும் செலுத்துவது என்பதற்கும் என்ன வேறுபாடு இருந்துவிடப் போகிறது?

இந்த இடத்தில் தான் ‘பின்னாடி கிடக்குற அண்ணன் போட்டோவ எடுத்து நடு ஹால்ல மாட்டுங்கடா’ என்பது போன்று, பொது வாழ்க்கையில் நுழைந்த பிறகு, கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாரா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

எது எப்படியோ, துக்க நிகழ்வுகளுக்கு செல்வது என்பது, மறைந்தவரின் மீதிருந்த மரியாதைக்காக என்றிருந்தாலும், இழப்பை சந்தித்து கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பவர்களுக்கு ‘நான் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையையும், இத்தனை பேர் நமக்காக இருக்கிறார்கள் என்ற ஆறுதலையும் கொடுப்பதற்கே.

இதனை கமல்ஹாசன் போன்ற பெரும் ஆளுமைகள் தவறாமல் செய்வது என்பது, அவரது கருத்தின் மீதான கேள்விகளையும், விமர்சனங்களையும் தாண்டி நிச்சயம் வரவேற்கத்தக்கதே!!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Questions keep rising on kamalhaasans policy of participating in funerals

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X